பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 அகத்தினணக்கொள்கைகள்


வுறுவர். இல்லறம் வற்றிப்போகும். பொறுக்க அறியாமையினால் கெட்ட குடிகளைக் காணாயோ?' என்று கழறியுரைக்கின்றமை காண்க."41 -

மனைமாட்சி இல்லான்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.’’42

இதனைத் தலைவியைக் கழறியதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். புறப்பொருளில் வரும் பேகன் என்ற வள்ளலும், அவன் மனைவியும் ஊடல் நீட்டித்துப் பெரிதும் பிணங்கி நின்ற போது அவ்விருவரையும் கூட்டுதற்குக் கபிலர் முதலிய அறிஞர் முன்வந்து அவ்வள்ளலுக்கு உறுதி கூறிய புறநானூற்றில் வரும் செய்தி இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. இங்ஙனமே, சோழன் மனைவி ஊடல் நீட்டித்தவிடத்துப் புகழேந்திப் புலவர் சென்று அவ்வூடல் தீரக் கூறியதையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

  புலவி காமச் சிறப்பைப் பயக்க வல்லதாயினும், அது சிறிது

நீளினும் அதன் சுவை கைக்கும் என்பதை இல்லறத்தில் ஒழுகுவார் நன்கு அறிவர்.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்."43

என்ற வள்ளுவர் கூற்றை அறிக. ‘’உப்பு மிக்கவழித் துய்ப்பது சுவையன்றானாற் போல புலவி மிக்கவழிக் கலவி இன்பமின்றாம்" என்ற பரிமேலழகரின் இன்னுரையையும் எண்ணி மகிழ்க. எனவே, தொல்காப்பியர் இப்புலவியின் இறுதியில் தலைவனை அன்போடும் இடித்துக் கூறி, அவனைத் தழுவுதலே தலைவிக்கு முறையாகும் என்று கூறுவர். -

தாய்போல் கழறித் தழீஇக் கோடல்

ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப

கவவொடு மயங்கிய காலை யான."44

         (கவவு - முயக்கம்]

41. அகநானூற்றுப் பதிப்பாசிரியர் தோழி கூற்றாகக் கொண்டனர். இளம்பூரணர் அறிவர் கூற்றாகக் கொள்வர் (தொல். கற். 14. எ.டு. செய்யுள்) - 42. குறள் - 52. 43. குறள் . 1302 44. கற்பியல் . 32