பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவு வகைகள் 249


தலைவியை மணந்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் தலைவியை விட்டுப் பிரியும் வாய்ப்புகள் நேரிடும்; கூட்டங்கள் ஏற்படும். அகப்பொருள் நூல்களில் ஆறுவித பிரிவுகள் கூறப்பெறுகின்றன. இறையனார் களவியல் என்னும் நூலில்,

ஒதல் காவல் பகைதணி வினையே

- வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தை யென்(று)

ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே.1

 என்று அப்பிரிவுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. கல்வியின் பொருட்டும், நாடு காத்தற் பொருட்டும், இரண்டு அரசர்கள் தம்முள் மாறுகொண்டு பொரும்பொழுது அவர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டும், அரசன் கட்டளைப்படி ஏதாவது ஒரு நிமித்தத்தின் பொருட்டும், பொருள் தேடுதற் பொருட்டும், பரத்தை காரணமாகவும் பிரியும்போது தலைவன் தலைவியை உடன் கூட்டிக்கொண்டு செல்லான். அவ்வாறு சென்றதாகச் சான்றோர்களின் இலக்கியங்களும் இல்லை. தொல்காப்பியர் இக்குறிப்பை,
 "முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை."2

என்ற நூற்பாவில் புலப்படுத்துவர். 'முந்நீர் வழக்கம்' என்பதற்கு இளம்பூரணர் கப்பல் வழியாகக் கடலிற் செல்லும் பிரிவு என்று உரை கூறுவர். முந்நீர் என்பது கடல். ஆனால் நச்சினார்க் கினியர் 'ஓதல், தூது, பொருள்' ஆகியமூன்று நீர்மையால் செல்லும் பிரிவு என்று பொருள் கூறுவர். இளம்பூரணர் கருத்துப்படி கடல் வழியாக மகளிரைக் கூட்டிச் செல்லும் வழக்கம் இல்லாவிடினும், தரைவழியாகச் செல்லும் பிரிவில் தலைவியைக் கூட்டிச் செல்லும் வழக்கம் உண்டு என்று அருத்தாபத்தியால் பெறப்படுகின்றது. ஆனால், நச்சினார்க்கினியர் கூறுவது போல, தலைவியை உடன் கூட்டிச் செல்லும் புலனெறி வழக்காகச் சான்றோர் செய்யுட்களை இயற்றவில்லையாதலின், அவ்வழக்கம் தமிழர்களிடையே என்றும். இருந்ததில்லை என்று கருத வேண்டியுள்ளது. இன்றும் செட்டி நாடு போன்ற பகுதிகளில் வாழும் தனவணிகரும் அவரைச் சார்ந்த பிறரும் மலேயா போன்ற பிற நாடுகளுக்குச் செல்லும்பொழுது உரிமை மகளிரைக் கூட்டிச் செல்வதில்லை.3


1. இறை. கள. நூற். 35 2. அகத்திணை - 37 3. இவ்வழக்கம் சிறிது சிறிதாக மாறத் தொடங்குகின்றது. ஒரு சிலர் இன்று கூட்டிச் செல்லுகின்றனர்.