பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவு வகைகள் 251


center

கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான்
மாட வொள்ளெரி மருங்கெறிந் தொய்ய
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே அழிபடர் அகல
வருவர் மன்னால் தோழி.4

(உருகெழு - அச்சம் தரும்; வங்கம் - மரக்கலம்; போழ - கிழிய, அசைவு - ஒய்வு: வங்கூழ்-காற்று: நீகான்-மாலுமி; மாடவொள்ளெரி -கலங்கரை விளக்கம்; ஒய்ய-செலுத்தா நிற்ப; நாள் பல கழியாமையே - நாள்கள் பல கழிவதற்கு முன்பே; அழிபடர் - அழிக்கின்ற துன்பம்)

தலைவியைப் பிரிந்து திரைக்கடலில் கலம் செலுத்திப் பொருள் ஈட்டச்சென்ற தலைவன் காலம் தாழ்த்தினமையால் பெரிதும் வருந்திய தலைவி தோழியை நோக்கிக் கூறுவது இது. கடற்பிரிவு என்பதனை முதலடியே காட்டுகின்றது. 'உலகு கிளர்ந்தன்ன' என்ற உவமையும் 'பெருங்கடல் நீரிடைப் போழ' என்ற குறிப்பும் நீர்வழிப் பிரிவினை உணர்த்துகின்றன. வங்கம் என்பது மிகப்பெரிய மரக்கலம்-கப்பல்-என்பதை உணர்த்துகின்றது. மீகாமன் காற்றின் இயக்கத்தை அறிந்து அல்லும் பகலும் சோராது வங்கத்தைச் செலுத்துவான் எனவும், கலங்கரை விளக்கத்தை நோக்கிக் கரைசேர்ப்பான் எனவும் முதல் ஆறடிகளில் கடற் செலவு ஓரளவு புனையப்பெறுகின்றது. இப் புனைவில் கற்பனை வளம் இல்லை என்பது தெளிவு. பாலை நிலச் செலவைத்தான் வளம்படப் பாடினர் சங்கப் புலவர்கள். அங்ஙனம் பாடுந் திறந்தான் அக்காலத்து வளர்க்கப்பெற்றது. இந்தப் போக்கில் புதிய புதிய கற்பனை வளர்ந்ததேயன்றி, இந்தச் சூழ்நிலையில் இளநாகனாரின் கடற்கவிதை நல்ல பாட்டாக மலர்வதற்கு இடம் ஏற்படவில்லை. ஆயினும், இவர் கடற்பாட்டு ஒன்றினைப் பாடியதனில் பெருமை உடையவராகத் திகழ் கின்றார். நிலத்திணையில் தேர்ப்பாகன் கூறப்பெறுதல் போல் நீர்த்திணையில் மீகாமனை அமைக்கின்றார். நிலப்பாலையில் முதுவேனிலும் நண்பகலும் வரும். இந்நீர்ப் பாலையில்,

center

அறனின் றலைக்கும் ஆனா வாடை
கடிமனை மாடத்துக் கங்குல் வீசி

4.

______________ 5. அகம்-255