பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முப்பொருள் பாகுபாடு 13 திருத்தல். இரங்கல் என்பது, ஆற்றாமை. ஊடல் என்பது தலைவன் தலைவியரிடையே நேரிடும் சிறு பிணக்கு.

உரிப்பொருளின் இன்றியமையாமை :

ஒரு நாடகத்தைப் பற்றிப் பேசும்பொழுது இன்ன இடம் என்றும், இன்ன காலம் என்றும், இன்ன பாத்திரங்கள் என்றும் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிடுவர் அறிஞர்கள். அவ்வாறே அகப்பொருள் நிகழ்ச்சிகட்கு இந்த முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் உறுப்புகளாக அமைகின்றன. ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியே இவை அமைதல் வேண்டும் என்று வரையறை செய்துகாட்டுவர் தொல் காப்பியர். உரிப்பொருள்தான் இவற்றின் உயிர் நாடியாக இருப்பது. காதல் நாடகத்தின் இயக்கம் இதுவே என்று கூடத் துணிந்து கூறிவிடலாம். உரிப் பொருளாகிய காதல் நிகழ்ச்சியை இன்ன நிலத்தில் இன்னபொழுதில் இன்ன பொருள்களைச் சூழ் நிலையாக அமைத்துக் கவிஞர்கள் கவிதையை ஆக்கும் பொழுது இந்த மூவகைப் பொருள்களும்அதில்காட்சி அளிக்கும், ஒருபாடலில் இந்தப் பொருள்கள் அனைத்தும் வரவேண்டும் என்ற வரையறை இல்லை. சில வரவும் கூடும்; சில வராமல் இருத்தலும் கூடும். உரிப் பொருள் மட்டிலும் கட்டாயம் வருதல் வேண்டும். சுருங்கக் கூறின, அகத்திணைப் பாடல்களில் உரிப்பொருள் சிறந்து விளங்க, முதற் பொருளும் கருப் பொருளும் பின்னணியாக, அமைகின்றன என்று தெளியலாம்.