பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளுறை உவமம் - 481

-----------------------------------------------------------------------------

தந்தையரால் உளனாகிய தலைவனாகவும், தேன் அடையிலிருந்து ஒழுகிய தேன் இவ்விருவரையும் கூட்டிய பால்வரைத் தெய்வமாகவும், அத்தேறலைப் பருகுகின்றோம் என்னும் நினைவின்றி விடாயினாற் பருகிய மயில் உயர்ந்த தலைவனை அடைகின்றோம் என்னும் எண்ணமின்றி நுகர்ந்த அச்சத்தாற் சார்ந்த தலைவியாகவும், அத்தேறலாற் பிறந்த களிப்பு தலைவன் இவ்வாறு முன்னர்த் தன் மெய்தொட்டுப் பயின்றறியாத புத்துணர்வால் தலைவி யுள்ளத்தில் களவொழுக்கத்தினால் பிறந்த பேரின்பமாகவும், மயில் களிப்பு மிகுதியால் ஆடஇயலாதன்மை தலைவி தான் பெற்ற புத்துணர்வின் மயக்கத்தால் செய்வதறியாது திகைத்து வருந்தும் தன்மையாகவும் செவிலி உய்த்துணரும்படித் தோழி உள்ளுறை கூறுகின்றாள்.

         மேலும் அவள் தலைவனுடைய நாட்டையும் உள்ளுறை உவமத்தாலேயே சிறப்பிக்கின்றாள். விண்ணுறவோங்கிய மலையின் கொடுமுடிகளில் கிளைத்த செங்காந்தளினுடைய குளிர்ந்த மணம் நாறும் பூக்கள் வரையர மகளிர் பரவி விளையாடுதலால் நலம் சிறிது கெட்டு விரும்பும் வண்ணம் கீழே பரவி அவ்விடத்தை நன்றாகிய பல கச்சு விரிக்கப்பெற்று அழகுறப் பொலியும் களம் போன்று அழகு பெறப் பொலிந்த குன்றுகெழு நாடு எனத் தலைவனது நாட்டினைத் தோழி சிறப்பித்துரைக்கின்றாள்.
         
            இதிலும் உள்ளே உறையும் அடிப்படைக் கருத்துகளைக் கண்டு மகிழ்வோம். உயர்ந்த நிலத்தே பூத்த செங்காந்தள் உயர் குடியிற் பிறந்த தலைவனாகவும், அத்தகைய காந்தள் மலர் வரையரமகளிரின் விளையாட்டால் நலஞ் சிறிது குறையக் கீழ் நிலத்தே உதிர்ந்து பரந்தமை பால்வரை தெய்வத்தின் விளையாட்டால் தலைவன் தனது பெருமை சிறிது குறைய எளியனாய் வந்த செயலாகவும், காந்தள் தான் வீழ்ந்த இடத்தைப் பொலிவுடைய தாக்கி மணங்கமழ்தல் அரியனாகிய தலைவன் எளியனாகி வந்து தலைவியை மணந்துகொண்டு அவள் குடிக்கு அழகு தரும் சிறப்பாகவும் செவிலி உய்த்து உணர்ந்து கொள்ளுமாறு தோழி உள்ளுறை அமைத்துக்கூறிய திறம் அவளது நுண்ணிய அறிவின் மாட்சியினைத் தெளிவுபடுத்துகின்றது.
            
        இந்த உள்ளுறைகளால் தலைவனது உயர்குடிப் பிறப்பும் அவளால் தலையளிக்கப்பெற்ற தலைவியின் வேட்கையும் எத் துணையும் சிறந்தானாகிய அவனை இங்ஙனம் தலைவிக்கு

அ-31