பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராம தூதன் 129

(ட) 'கண்ணிர் மார்பில் வழியும் நிலையிலுள்ள பிராட்டி, என் செயல் வஞ்சனையுடைய அரக்கரின் மாயச் செய்கையாகும் என ஐயுற்றும், என்னை நோக்கி, நீ யான் இறக்கும் தறுவாயில் அஞ்சன வண்ணனின் திருநாமத்தைச் சொல்லி யான் இறப்பதைத் தவிர்க்குமாறு செய்தாய் என்று மகிழ்ச்சியுடன் உரைத்தாள். (75)

(ன) "எந்தாய், அடியேன் அறிவிற் பொருந்துமாறு விளக்கமாகச் சொன்ன பெரிய அடையாளங்களையெல்லாம் பிராட்டி பொருத்தமாக நோக்கி, அடியேன் மனத்தில் மாறுபாடில்லாமையையும், அடையாள மொழியையும் எண்ணி, இறுதியாக, நீதந்த கணையாழியை எடுத்துக்காட்ட அதனை ஏற்றுக்கொண்டாள்; அஃது உயிரை இறவாமல் நிலை நிறுத்திக் காக்கும் மருந்தை ஒப்பதாயிற்று. (76)

(த) "அடியேன் தந்த ஆழி, வஞ்சரூர் வந்தமையால் தூய்மையை இழந்தது என்று கருதித் தன் மழைக்கண்ணிரால் ஆயிரம் திருமுழுக்காட்டினாள்; இரங்கிக்கொண்டிருந்த தல்லாமல் ஒன்றும் பேச முடியாதவளாயினள், இளைத்திருந்த திருமேனி பூரித்தது; வியப்பு எய்தினாளன்றி இமைத்திலள்; பெருமூச்செறிந்தாள். (78)

(ந) "பெருமானே, அடியனேன் அப்பெருமாட்டிக்கு நின்னைப் பிரிந்த பின் நேர்ந்தவற்றையெல்லாம் அவள் அறியும்படி சொன்னேன்; பின்னர், தோகாய், நீ இருந்த இடம் இன்னதென்று அறியக்கூடாமையால் இத்துணைக் காலம் தாழ்த்தது என்றேன்; அவளைப் பிரிந்தமையால் நீ வருத்தப்படும் தன்மையையும் தெரியச் சொன்னேன்; அதன் பின்னர் உயிர் நீங்காதிருக்கப்பெற்றாள். (79)

(ப) இவ்விடத்திலுள்ள தன்மைகளையெல்லாம் நடந்த முறைப்படி அடியேன் சொன்னவற்றைக் கேட்டாள்; அங்குள்ள தன்மையெல்லாம் அடியனேன் தெரியச் சொன்னாள்; இனி ஒரு மாத காலம் உயிருடன் இருப்பேன்; அதற்குள் சக்கரவர்த்தித் திருமகன் அழைத்துச் செல்லத் திருவுள்ளம் இல்லையென்றால் உயிரிழப்பேன் என்றும் சொல்லி நின் திருவடிகளைத் தலையின்மீது வைத்துத் திக்கு நோக்கித் தண்டன் சமர்ப்பித்தாள்” (80)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/130&oldid=1361300" இலிருந்து மீள்விக்கப்பட்டது