பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமபக்தன் 135

சாதுசனத்தை நலியும் கொடியவர்களைக் கடிந்து, நல்லோர்களைப் பாதுகாத்து, அறத்தை நிலைநாட்டுமாறு ஆதியஞ்சோதி உருவை அங்குப் போல் இங்கு வைத்து இராமபிரானாகத் திருவவதரித்தமை (அவதார இரகசியம்) இதனால் சொல்லப்பெறுவதால் அநுமனது இராம பக்தி தெளிவாகின்றது.

(5) பிராட்டியைத் தேடுவதில் முன்னேற்றம் இல்லாமையால் ஒரு நிலையில் வானர வீரர்கள் மனம் உடைந்து நின்றபோது, அநுமன், "தேட வேண்டிய இடம் இன்னும் அதிகமாக உள்ளது. அதற்குள் நீங்கள் சலிப்படைவது தகுதியன்று. தேடுவது இன்றியமையாதலால் தவணை நாள் கடந்தாலும் சிறிதும் கலங்காது, மேற்கொண்ட செயலில் ஊக்கம் கொள்ளுதலே தக்கது. சுக்கிரீவனும் மெச்சுவான். நம்மால் இயன்றவரையில் பிராட்டியை எல்லா இடங்களிலும் தேடிப் பார்ப்போம். அகப்படாவிட்டால், பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்திற்காக இராவணனை எதிர்த்து நின்று போரிட்டு மாய்ந்த சடாயுபோல் வீழுதல் பெருமை” " என்று கூறுவான். இராமன்பால் எவ்வளவு பக்தி இருந்தால் இவ்வாறு பேசி இருக்கமுடியும்!

(6) பிராட்டியைத் தேடித் தென்திசைச் சென்ற வானர வீரர்கள் மயேந்திர மலையை அடைகின்றனர். ஒருநிலையில் சாம்பவான் அதுமனை நோக்கி, "நீரே கடல் கடந்து பிராட்டியைக் கண்டு வரவேண்டும்" எனக் கூற, அநுமன் அதற்கு உடன்படுகின்றான். தனக்கு இது பெறற்கரிய பெரும்பேறு என்று கூறியவன் மேலும் கூறுவான் :

“இலங்கையை வேரொடு பெயர்த்தெடுத்துக் கொண்டுவா என்றாலும், அரக்கர்களை அடியோடு அழித்துப் பிராட்டியை எடுத்துக்கொண்டு வா என்றாலும் சொன்ன சொற்படி செய்து முடிப்பேன். மண் அளந்த மால் போல, ஒரு நூறு யோசனை தொலைவும் ஒரடிக்குள் அடங்கும்படி கடலை எளிதாகத் தாண்டி, இந்திரன் முதலான தேவர்கள் அரக்கர்கட்கு உதவியாக வந்தாலும்,

12. கிட்கிந்தை. சம்பாதிப் - 19 - 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/136&oldid=1361312" இலிருந்து மீள்விக்கப்பட்டது