பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 அண்ணல் அநுமன்

காண்பதற்காகவே அவண் வந்ததாகக் கூறி, "நீ இன்று சொன்ன, செவ்வழி உள்ளத்தானைக் காட்டுதி தெரிய என்று வினவுகின்றான், இராமன். அதற்குக் கோதில் சிந்தை அநுமன் கூறிய முகமன் : "ஐயன்மீர், தங்களைப் போன்ற புனிதர் யாருளர்? இங்ங்னம் ஒப்பவரில்லாத நீங்கள் எங்குலத் தலைவனிடத்து அன்பு பாராட்டி அவனைக் காண்டற்கு அணுகினiர் என்னின், அதனால் அப்பெருமகன் செய்த தவமேயாகும் (24). "ஆதவன் புதல்வனாகிய சுக்கிரீவனை, தமையனான இந்திரன் புதல்வனான வாலி என்பவன் சிறிதும் இரக்கமின்றித் துரத்திவிட்டதனால் துன்பத்தை அநுபவித்தற்குத் தனியனாய் என்னுடன் ஒளிந்திருக்கின்றான். அவனிடம் செல்வம் வருவது போன்ற குறிப்பில் நீங்கள் வந்துள்ளீர்கள் (25. "பலவகைப்பட்ட அறங்கள், வேள்விகள், தவங்கள் முதலியவை யாவற்றையும்விடப் புகலடைந்தோர்க்கு 'அஞ்சற்க என்று அபயம் அளித்தலே பேரறம் என்பது பெரியோர் கருத்து' (26)". "நீர் எல்லா உலகங்களையும் காக்கும் முழுமுதற் கடவுளின் அமிசமாதலின், நீரே எமக்குப் புகல்; உம்மைச் சரணம் அடைவதே எமக்கு எல்லா நன்மைகளையும் விளைக்கும். ஆகவே, யாம் உம்மைச் சரண் அடைவோம்” (27).

இங்குப் பேரறிவினனாகிய அநுமன் இராமலக்குமணர் களின் சொரூபத்தை நன்கு அறிந்துகொண்டு பேசுவதைக் காண்கின்றோம். இப்பேச்சில் வாலி வதத்திற்கு அடிப்படை அமைத்தலையும் காணமுடிகின்றது. இவ்வாறு பீடிகை போட்டுப் பேசும் மாருதி மிக நாகரிகமாக,

"யாரென விளம்பு கேன்நான்

எங்குலத் தலைவற்கு உம்மை வீரநீர் பணித்திர்.”* என்று விநயமாக வினவுகின்றான், மெய்ம்மையின் வேலி போன்ற அநுமன். இக்குறிப்பே நமக்கு அஞ்சனைச் சிறுவனைச் சொல்லின் செல்வனாக அறிமுகப்படுத்திவிடுகின்றது.

6. "நாங்கள் தும்மைச் சரண் அடைந்துள்ளோமாதலால் எம்மைக்

காக்க வேண்டியது நுமது கடன்" என்பது குறிப்பெச்சம். 7. கிட்கிந்தை - அநுமப். - 24, 25, 26, 27 8. கிட்கிந்தை - அநுமப். ...... ....... ... - 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/25&oldid=1509163" இலிருந்து மீள்விக்கப்பட்டது