பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் செம்மல் 47

அநுமனது சிந்தனையோட்டம் : இவர்களைத் தேவர்கட்குத் தலைவர்களான மும்மூர்த்திகள் என்றால் அவர்கள் மூவர்; இவர்கள் இருவர்; வலிமை பொருந்திய வில்லைத் தாங்கியவர்களாகக் காணப்பெறுகின்றனர். இவர்களை ஒப்பவர் எவரும் இலர் இவர்கள் செய்வதற்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை; இவர்கள் தன்மையை எப்படி ஆராய்வது? (7)

இவர்களைக் கூர்ந்து நோக்கினால் துன்பத்தினால் வருந்தி அயர்த்தவர்கள்போல் காணப்பெறுகின்றனர். அவ்வாறு எளிதில் வருத்தமுறுவதற்கு எளியவர்களும் அல்லர், உம்பர் உலகத்தைச் சார்ந்தவர்களோ என்று ஐயுறுவதற்கும் காரணம் இல்லை. மானிடரின் உருவமுடைய வர்களாக உள்ளனர். ஏதோ ஒரு பொருளைத் தேடுவது போலவும் காணப்பெறுகின்றனர். (8)

மேலும், அறத்தையும் ஒழுக்கத்தையும் செல்வமாக எண்ணுபவர்கள்; இவர்கள் இவண் போந்தது பிறிது ஒர் காரியத்தைப்பற்றியதும் அன்று; அக்காரியம் என்னவென்று ஆலோசித்துப் பார்க்குமிடத்து, கிடைத்தற்கரிய வானமிழ்தத் துக்கு ஒப்பானதும், நடுவில் நீங்கிப் போனதுமாகிய ஒரு பொருளை இருமருங்கும் தேடுகின்றவர்களாகத் தெரி கின்றது. (9)

இவர்கள் சினம் என்னும் தன்மை சிறிதும் இல்லாதவர்கள்; கருணைக் கடலாகத் திகழ்பவர்கள்; நன்மையேயன்றித் தீமை சிறிதும் அணுகப்பெறாதவர்கள்; இந்திரனும் அஞ்சத்தக்க கம்பீரமான தோற்றமுடையவர்கள்; அறக்கடவுளும் அஞ்சத்தக்க திருமேனியையுடையவர்கள்; இயமனும் அஞ்சத்தக்க வல்லமை படைத்தவர்கள். (10)

இங்ங்ணம் சிந்தனையில் ஆழ்ந்தவன் யாவன்? கூறுவான் கம்பன், "தன் பெருங்குனத்தால் தன்னைத் தானலாது ஒப்பிலாதான்” (ii) என்று. நாம் சிந்தித்து நோக்கினால் உண்மையும் அதுதானே!

இவ்வாறு சிந்தித்த நிலையில் அநுமன் சில இயற்கை நிகழ்ச்சிகளைக் கண்ணுறுகின்றான். அவற்றின் அடிப்படை யில் அவனது சிந்தனையோட்டத்தைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/48&oldid=1356739" இலிருந்து மீள்விக்கப்பட்டது