பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 அண்ணல் அநுமன்

போர்க்களம், அம்மிக்கல்; அக்ககுமாரன் உடல், குழவி. இவற்றை நோக்கும்போது அக்ககுமாரனின் பேருடல் நம் மனக் கண்முன் காட்சி அளித்து வியக்க வைக்கின்றது.

7) இந்திரசித்தன்” பிரவேசம் : தம்பி கொல்லப்பெற்ற செய்தியைக் கேட்டதும் இந்திரசித்து கடுங்கோபம் கொண்டு பெருஞ்சேனையுடன் போர்க்களத்துக்குக் கிளம்புகின்றான். நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நினைந்து பார்த்துத் தன்னையே வெறுத்துக்கொள்ளுகின்றான்.

"கானிடை அத்தைக்கு உற்ற

குற்றமும் கரனார் பாடும் யானுடை எம்பி வீய்ந்த

இடுக்கணும் பிறவும் எல்லாம் மானிடர் இருவ ரானும்

வானரம் ஒன்றி னானும் ஆனிடத்து உளஎன் வீரம்

அழகிற்றே அம்ம என்றான்."" (கான் - காடு; அத்தை - சூர்ப்பனகை, கரனார் பாடு - கரன் இறந்தது; யான் உடை - யான் உடைமையாகப் பாராட்டி வந்த வீய்ந்த இறந்த, இடுக்கண் - துன்பம்; ஆனிடத்து - உண்டாயின என்றால், அம்ம - ஆச்சரியம்) என்ற பாடல் இந்திரசித்தனின் புழுக்கத்தையும் வெறுப்பை யும் காட்டுகின்றது; துயரத்திற்குமேல் சினம் மிகுதலைப் பார்க்க முடிகின்றது.

37. இராவணன் திக்கு விசயம் செய்தபோது இந்திரனை எதிர்த்துப் போர் செய்ய முடியாத நிலையில் அவன் மகனான மேகநாதன் மாயையால் மறைந்து பொருது, இந்திரனைக் கலங்கச் செய்து, அவனை மாயபாசத்தால் கட்டிக்கொண்டு போய் இலங்கையில் சிறை வைத்திட்டான். இதனை உணர்ந்த நான்முகன் தேவர்கள் சூழ அங்கு வந்து, இராவணனைக் கண்டு, "இந்திரனைச் சயித்ததனால் உன் மகனுக்கு இந்திரசித்து என இனிப் பெயர் வழங்குக" என உபசார வார்த்தை கூறி, அம்மகனுக்கு வரமும் அளித்து, இந்திரனைச் சிறை மீட்டுச் சென்றனன் என்ற வரலாறு ஈண்டு அறியப்படும்.

38. சுந்தர. பாசப். - 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/93&oldid=1360809" இலிருந்து மீள்விக்கப்பட்டது