பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

உடற்கல்வி என்றால் என்ன?



“உடலுக்கு அதிகமான உழைப்பு வேண்டும். உடல் உள்ளத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். நல்ல வேலைக்காரன் என்பவன் பலமானவனாக இருப்பது போல, நல்ல உடலானது மனதிற்குக் கட்டுப்பாடுள்ளதாக இருக்க வேண்டும். அறிவை வளர்த்து விடுகிறபோதே, அதை அடக்கி ஆளவும் கற்றுத்தரவேண்டும். எல்லாவித நிலையிலும், உடல் வலிமையுடனும் வீரத்துடனும் திகழ வேண்டும்.

தேகமும் செயல்களும்

உலகில் உள்ள உயிரினங்கள் யாவும் சுறு சுறுப்பாகவே வாழ்கின்றன. உலகில் சில உயிரினங்கள் தங்களது சக்தியின் காரணமாக இயக்கம் கொள்கின்றன. சில இருந்த இடத்திலேயே இருந்து, வளர்ந்து கொள்கின்றன. சில தாவரங்கள் இடம் விட்டு இடம் சென்று வளர்ச்சி அடைகின்றன.

இயக்கங்களே எல்லா உயிர்களுக்கும் ஆதார சக்தியாக அமைந்திருக்கின்றன. உயிர்கள் இயங்கும் சக்தியை இழந்து விடுகிறபோது, இறந்துபோகின்றன. அதனால் தான் “இயக்கமே வாழ்க்கை, வாழ்க்கையே இயக்கம்” என்று அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள்.

இப்படி இனிதாக நடைபெறும் இயக்கங்களை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. உயிர்வாழும் இயக்கங்கள் : (Survival Activities)

2. வளர்த்துவிடும் இயக்கங்கள் : (Developmental Activities)