பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

263



உடற்கல்வி உதவுகிறது

1. உடற்கல்வியானது சமுதாயப் பண்புகள் செழித்தோங்க உதவுகிறது. பல இடங்களிலிருந்தும் பல பகுதிகளிருந்தும் வருகிற தனிநபர்களை, தனித்தனியாக அல்லது அணி அணியாக ஒன்று சேர்க்கும் இனிய நடைமுறைகள் விளையாட்டுக்களில் இருக்கின்றன.

சிலருக்கு சமுதாய அடிப்படையின் அனுபவங்கள் தெரிந்திருக்கும். மற்றவர்கள் எதுவும் அறியாதவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் வாழ்க்கை பின்னணி, சூழ்நிலை, உணவு, உடை, பேச்சு போன்ற வழக்கங்களும் மாறுபட்டதாகக்கூட அமைந்திருக்கும்.

இத்தகையோர் இவ்வாறு விளையாட்டுக்காக ஒன்று சேர்கிற பொழுது, மற்றவர்களுடன் அனுசரித்துப் போக வேண்டியிருப்பதால், தங்கள் நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர். அப்போது புதிய நடைமுறைகள் என்கிற பொதுநடைமுறைகளே (Behaviour) அமைந்து விடுகின்றன.

இந்தக் கருத்தை உடற்கல்வி ஆசிரியர்கள் உணர்ந்தால் போதும். கூடி வருகிற மாணவர்களை ஒன்று சேர்த்து நன்கு வழிகாட்டி புதிய சமுதாயத்தையே வலிமையான ஒன்றாக மாற்றிவிடலாம்.

2. சமுதாய மரபுகள், பழக்க வழக்கங்கள் என்பன சிறந்த நோக்குள்ளவையாக இருக்கும் போது, அவை மீண்டும் வலிமையும் செழுமையும் பெற, இந்தக் கூடி ஆடும் முறை உதவி விடுகிறது.

எனது சமுதாயம், எனதுநாடு, எனது தேசம் என்ற நினைப்பும் முனைப்புடன் பெருகிட, உடற்கல்வியின் உன்னதப் பணி மிகுதியாகவே நடைபெறுகிறது.