பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

உடற்கல்வி என்றால் என்ன?


உடற்கல்வி உடலை வலிமையாக்கி, மூளை வளத்தை மிகுதிப் படுத்துவதால் செய்கிற தொழிலில் ஏற்றம் பெருகுகிறது.அந்த ஏற்றமே தொழிலில் நிறைந்த புகழைக் கொடுத்து விடுகிறது. ஆக, வேலைத் திறமைக்கு நல்ல உடலையும் மனத்தையும் வளர்த்து, உடற்கல்வி உதவுகிறது.

2. விடுமுறையிலும் வேலை வாய்ப்பு:

வேலை செய்யும் காலங்கள் கழித்து, விடுமுறை கிடைக்கின்ற சமயங்களிலும், வேறு பல விருப்பமான வேலைகளில் ஈடுபட்டு, பொருள் சம்பாதிக்கவும், பொழுதைப் பயனுள்ளதாகப் போக்கவும் உடற்கல்வி உதவுகிறது.

சரியான பொழுதுபோக்கு அம்சங்கள், வருமானம் வரக்கூடிய வாய்ப்புக்கள் இவற்றை சரியானதாகத் தேர்ந்தெடுக்கக் கூடிய சாகசமான யுக்திகளை, உடற் கல்வியே வழங்குகிறது.

3. வேலையில் வெற்றி பெறுதல் :

எல்லாரும் தொழிலாளர்தான். ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு வாழ்பவர்கள் தாம் என்றாலும் எல்லோரும் தாங்கள் செய்கிற வேலையிலே வெற்றிகரமாக ஈடுபடுவது இல்லை. வெற்றியாளர்களாக விளங்குவதும் இல்லை.

வலிமையுடனும், விவரமாகவும் வேலை செய்ய விரும்புகிறவர்கள், தாம் செய்யும் வேலையில் சிறப்பான வெற்றியை அடைய முடியும். அப்படி அரிய காரியம் ஆற்ற வேண்டுமானால், அவருக்கு நல்ல உடல் நலம் இருந்தாக வேண்டும்.