பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



6

உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு


மகிழ்வெய்தினேன். ஆனால், இச்சுருக்க நூலாசிரியர் எட்டுத் தொகையில் அகப் பொருள் நூலாகிய ஐங்குறுநூற்றின் மருதக்கலிப் பாட்டு நூறுக்கு உரை எழுதினர் என்பதும் அது அவர்தம் மதிப்பு மிக்க மாணவர் புலவர் கோவிந்தனவர்களால் 1938-இல் சேயாற்றில் அச்சிட்டு வெளியிடப் பெற்றதென்பதும் அறிதற்பாலன. புலவர் ஒளவையவர்கள் தொடர்பு கழகத்துக்கு ஏற்பட்டபின் புலவர் கோவிந்தனவர்களிடம் விற்கப்பெறாமல் தங்கிக்கிடந்த மருதக்கலி உரைப்படிகள் யாவும் கழகவழி விற்றுக்கொடுக்கப் பெற்றன. சீவக சிந்தாமணிச் சுருக்கம் வெளிவந்தபின் அதைப் போலவே புலவர் ஒளவையவர்கள் எழுதிய 'சிலப்பதிகாரச் சுருக்கம்' 1943-இலும், மணிமேகலை சுருக்கமும், சூளாமணிச் சுருக்கமும் 1943-இலும் வெளியிடப் பெற்றன. புலவர் ஒளவையவர்கள் 1941-இல் செங்கம் உயர்நிலைப் பள்ளியிலும், 1942-இல் திருப்பதிக் கீழ்த்திசை ஆராய்ச்சிக் கழகத்திலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்து, 1943 சூன் முதல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழ் ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராக அமர்த்தப் பெற்றனர். அங்கே எட்டு ஆண்டு காலம் பணி புரிந்து 1951 சூலைத் திங்களில் மதுரைத் தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தப் பெற்றனர். திருப்பதியில் வேலை பார்க்கும் போது கழக அமைச்சரும் என் அருமைத் தமையனாருமாகிய திருவரங்கனார் அனுப்பிய ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகிய யசோதர காவியம் ஏட்டுச் சுவடியுடன் தமக்குக் கிடைக்கப் பெற்ற வேறு இரண்டு சுவடிகளையும் வைத்து ஆராய்ந்து அந்நூலுக்குத் தெளிவான உரை எழுதி அனுப்பி வைத்தனர். அதனைக் கழகம் அச்சிட்டு 1944 சூன் திங்களில் வெளியிட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு ஆகிய மூன்று நூல்கட்கும் புத்துரை எழுதித் தருமாறு முதுபெரும் புலவர் நாவலர் வேங்கடசாமி நாட்டாரவர்களை வேண்டினோம். அவர்களும் அதற்கிசைந்து முதற்கண் சிலப்பதிகாரத்துக்கு விளக்கவுரை எழுதித் தந்தனர். அதன்பின் மணிமேகலை முதல் 26 காதைகட்குத் தம் அருமைத் திருமகளார் சிவபார்வதியம்மையாரைக் கொண்டு பதவுரையும் தம் விளக்கவுரையும் எழுதி ஏனைய நான்கு காதைகட்கும் சமய நூல்களை ஆய்ந்து எழுதவேண்டுமென்று கருதுகையில் திடுமெனக் கூற்றுவன் நாட்டாரவர்களது இன்னுயிரைக் கவர்ந்து சென்று இறைவன் திருவடி நீழலிற் சேர்ப்பித்தனன். எனவே, தமக்குக் கல்வி கற்பித்த