பக்கம்:கல்வி எனும் கண்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

நடத்துகிறார். உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கல்வி-பெண் கல்வி மிக இழி நிலையில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன. (The Hindu- 22.11.91) எனவே தலைவர்கள்-அறிஞர்கள், கல்வித் துறையினைக் கட்டி ஆளுபவர்கள் பண்டித நேரு கூறியதையும் உலகத்தார் பழிப்பதையும் எண்ணி உடன் செயலாற்ற இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்ப்தே என் ஆசை.-- வேண்டுகோள்.

எல்லாவற்றினும் நல்லனவும் உண்டு; அல்லனவும் உண்டு. எனவே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர் ஆட்சியில் இருந்த கல்வி முறையினைப் பற்றிக் கூறி, அதில் உள்ள நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அல்லனவற்றை விட்டு வேறு திருத்திய நெறிக்கு மாற வேண்டுமெனவும் நூலில் அங்கங்கே சுட்டியுள்ளேன். பல நல்லன மாறியுள்ளன. அவற்றை எண்ணிப் பார்க்கவும் வேண்டியுள்ளேன்.

சுதந்திரம் பெற்றபின் மாநில, மத்திய அரசுகள் இக்கல்வியின் சீர்திருத்தம் பற்றியும் மாற்றம் பற்றியும் எத்தனையோ குழுக்களை அமைத்தன. அவையும் பலப் பல வகைகள் ஆய்ந்து பல்வேறு கருத்துக்களை ஏட்டில் வடித்துத் தந்தன. ஆயினும் அவை ‘கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றல் இன்றி, நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே நாளில் மறப்பாரடி’ என்ற பாரதியார் வாக்கின் வழிதானே நிற்கின்றன. அண்மையில் திரு. இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் இந்திய அரசு அமைத்த கல்விக் குழுவும், நாட்டு நலம் காணத்தக்க கல்வி முறையினை ஓரளவு வரையறுத்துக் காட்டியுள்ளது. அதன் கருத்துக்கள். சிலவற்றையும் அப்படியே இந்நூலில் , (ஆங்கிலத்தில்) சேர்த்துள்ளேன்.

அதில், ஓரிடத்தில் கல்வியில் பெற வேண்டிய மாற்றங்களைச் சுட்டி, அவ்வாறு நல்ல நெறியில் கல்வி திருத்தம் பெறாவிட்டால், அத்தகைய கல்வியைக் கற்பதைக் காட்டிலும் கல்லாதிருப்பதே மேல் எனவும் குறித்துள்ளார். (If this is what our education has done to us, one may well ask, is not no education better than bad education— Page V). இது எனக்கு, ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்ற தாயுமானவர் அடியை நினைவூட்டிற்று. தாயுமானவர் ‘கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுவேன்’ என்று நைந்து உருகியதையும் நினைக்க வேண்டியுள்ளது.