பக்கம்:கல்வி எனும் கண்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலையர் கல்வி

99


வெறும் பால் உண்பிக்கும்-தூங்கவைக்கும் நிலையங்களாகவே உள்ளன. எனினும் தெருவுதோறும் இத்தகைய காப்பகங்கள் வளர்ந்து வருவதால், அவற்றை முறைப்படுத்தி, உரிமம் வழங்க வகைகண்டு, தாய்மொழியிலேயே அக்குழத்தைகளைப் பழக்க வழிவகை காணவேண்டும். அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ ஆங்கில மொழி உணர்வு மழலை உள்ளங்களில் நிழலிடுகின்றன. பிரான்சில் பிரஞ்சு மொழி பிள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுகின்றது. ஏன் நம் வடநாட்டிலும் அவரவர் தாய்மொழியே வாய்மொழியாக இளம் பிள்ளைகள் பயில வழி செய்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில்தான் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’, என்று பாரதி கண்ட கனவு வெறும் பாட்டினிலோ அன்றி வருங்கால வரலாற்றிலோ இருக்கவே இந்த மழலையர் பள்ளிகள் வழிவகுக்கின்றன. அரசு அன்றி வேறு யாரே இதைத் தடுத்து நிறுத்த வல்லார்!

மூன்று வயது முடிந்ததும் முறையான வகையில் தொடக்க வகுப்பில் (L.K.G.) பிள்ளைகள் சேர்க்கப் பெறுகின்றனர். இளம் பிள்ளைகள் (0-6 வயதில்) நம் மக்கள் தொகையில் நூற்றுக்குப் பதினேழு என்ற வகையில் உள்ளனர் என அரசாங்கக் கணக்கு எழுதப்பெற்றுள்ளது (Page 114 Towards an Enlightened and Humane Society) அவற்றுள் பெரும்பாலான வறுமை நிலையில் வாடுகின்றன. அக்குழந்தைகள் 100க்கு 10 சதவீதமே மேலே கண்டவகையில் மழலையர் காப்பகத்திலும் மழலையர் பள்ளிகளிலும் இடம் பெறுகின்றனர். பெரும்பாலான பிள்ளைகள் வழிவகை இன்றி வாடுகின்ற்னர். அந்த 100க்கு 10இல் பெரும்பாலானவர் நகரங்களில் உள்ளவர்களே. இந்த நிலையில் இளம் பிள்ளைகள் வளர்ந்தால் கல்வியிலும் பதவிகளிலும் எத்தனை மண்டல கமிஷன் வந்தாலும் 100க்கு 27 அல்லது 37என ஒதுக்கினாலும் என்ன பயன்? இந்த மழலையர் பள்ளிகளில் பெருந்தொகை செலவிட்டுச் சேர்ந்து பயிலும் பிள்ளை