பக்கம்:கல்வி எனும் கண்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதியோர் கல்வி

111


தற்போது தமிழ்நாட்டில் புத்துணர்ச்சி அரும்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தினைப் பூரணக்கல்வி அறி மாவட்டமாக்க முனைந்துள்ளனர் என்ற செய்தி அண்மையில் வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டம் ஏறக்குறைய நிறைவு எய்தும் நிலையில் உள்ளது எனக் கூறுகின்றனர். நாட்டில் பல நிறுவனங்கள் தாமே முன்வந்து, இந்த எழுத்தறிவு இயக்கத்தில் பங்கு கொண்டு பாடுபட முனைகின்றது எனக் கேட்டறிகிறோம். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ஊர்தோறும் சென்று இந்த ஆக்கப்பணிக்கு ஆவன செய்கிறார்கள் என அறிகிறோம். இன்றைய மாநில அரசும் இந்த வகையில் மத்திய அரசின் துணையுடன் பல கோடி செலவிட்டு இந்தஎழுத்தறிவு இயக்கத்தினைச் செயல்படுத்துகின்றது என்பதைக் கேட்க மகிழ்ச்சி பிறக்கின்றது. அரசாங்கம் பல ஆண்டுகளாக இதற்கெனக் கல்வித்துறையில் ஒரு தனிப்பிரிவே அமைத்து, அதற்கெனத் தனி இயக்குநரையும் இருக்க வைத்து, ஊர்தோறும் செயல்படுவகையில் பல அதிகாரிகளை நியமித்து ஆவன செய்து வருகின்றது. ஒவ்வொரு பஞ்சாயத்து எல்லையிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப் பெற்று, அவர்கள் ஊர்தொறும் சென்று முதியோர் கல்வி நிலையங்கள் அமைத்துப் பாடுபடுகின்றனர். முதியவர்களுக்கு வேண்டிய பலகை, புத்தகம், கரும்பலகை, போன்றவற்றை இனாமாக அளித்து அழைக்கின்றனர். முதலில் ஒரு சிலர் சேர்ந்தாலும் மெல்ல மெல்ல. அவருள் பலர் விட்டு விலகுகின்றனர் என்ற குரலே கேட்கிறது. ‘வந்து படிப்பதற்கு எனக்கென்ன தருவாய்’ என்ற கேள்வியும் கேட்கப் பெறுகிறதாம்! எங்கோ ஒரு சில இடங்களில் தாமாகவே வலிய வந்து கற்கும் பெரியவர்கள்-எழுத்தறிவற்றவர் இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறோம். அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் படங்கள், விளக்க நூல்கள், இன்ன பிறவற்றையும் அரசாங்கம் தருகிறது. அவர்களுக்கு எப்பொழுது ஓய்வு கிடைக்குமோ அப்போது வகுப்புகளை