பக்கம்:கல்வி எனும் கண்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதியோர் கல்வி

119


ஒருவர் ஆண்டுக்கு ஓரிரு முறை பாடம் நடத்த, எப்போதோ கடும் கோடையில் ஒரே முறை தேர்வுக் களத்தில் குதிக்கும் இவர்கள் நிலை எண்ணத்தக்க ஒன்றாகும். மேலும் ஆய்வுக்களத் தொடர்புடைய பட்டங்களையும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி போன்றவற்றையும் இந்த அஞ்சல் வழிக் கல்விக்கு அப்பாலே இருக்க வைத்தல் நலமாகும். இந்தக் கொள்கையில் பல்கலைக் கழக மானியக் குழு விரைவில் சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்த நினைக்கும் குறிப்புகள் நாளிதழில் வெளிவருகின்றன.

தற்போது திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களும் செயலாற்றுகின்றன. சில பல்கலைக்கழகங்கள் அதற்கெனத் தனித்துறைகளை அமைத்துள்ளன. படிப்பே அறியாதவரோ அன்றிச் சிறிது பயின்றவரோ நேரே பட்டத் தேர்வுக்குச் செல்ல வழி உண்டு. சில பல்கலைக் கழகங்கள் அடிப்படைப் படிப்பை வலியுறுத்தும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுதல் ஒன்றும் போதுமானது, இது அவ்வளவு சிறந்ததா? அவற்றுள் பயின்றோர் உண்மையில் கற்றவர்கள் ஆவார்களா என்பதை வரும் காலம்தான் நமக்கு உணர்த்தும்,

எப்படியோ நாட்டில் எழுத்தறியாதவர்களை எழுத்தறிவு உள்ளவர்களாக்குதற்கும் சற்றே படித்தவர்கள் மேலும் மேலும் படித்துப் பட்டங்கள் பெறுவதற்கும் பலப்பல புதிய முறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் செம்மையாகச் செயலாற்றின் நினைத்த பயனைப் பெற இயலும், இன்றேல் கோடிக் கணக்கான நாட்டுப் பணம் செலவாவதோடு காலமும் வீணே கழிந்தொழிந்ததாக முடியும். எனவே இத்தகைய கல்வி நிலையங்களைக் கட்டிக் காக்கும் பொறுப்புள்ளவர்கள் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத-தேவையான சேவைகளை மனத்தில் கொண்டு நாட்டுக் கல்வியே முக்கியம் என்ற உணர்வில் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். எல்லாரும் கல்வி கற்று, மேலும் கற்று, மேன்மேலும் கற்று நாட்டின் நலனைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதே என் ஆசை!