பக்கம்:கல்வி எனும் கண்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழிற் கல்வி

127


மருத்துவக்கல்லூரிக்கு உடன் இணைந்தே ஒவ்வொரு மருத்துவமனை இருக்க வேண்டும் என்ற விதி இருப்பது போன்று பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளுக்கும் ஓர் உயரிய தொழிற்சாலை அல்லது தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என விதி செய்ய வேண்டும். பயிலும் மாணவர் பாதி நேரத்திலோ-அன்றித் தேவையான நேரத்திலோ அத்தொழிற்சாலையில் நேரிய பயிற்சி பெறல் வேண்டும், நான் முன்னே கிராமங்களுக்குக் காட்டிய சிறுதொழில் நெறிப்படி, இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர் பெருந்தொழிலோ சிறு தொழிலோ தேவையானால் கிராமந்தோறும் தாமே தொடங்க உந்துதல் பெற்றவராதல் வேண்டும். இன்றேல் பலகோடி தொழிற்கல்விக்குச் செலவிடுதலால் பயனில்லை, அரசாங்கமும் தொழிற் கல்லூரி அமைப் போரும் இந்த வகையில் கருத்திருத்தி ஆவன செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளுகிறேன்.

தொழிற் கல்வியின் ஒவ்வொரு துறையினையும் தனித் தனி ஆராயின் அதுவே பெருநூலாகும். அதற்கு ஏற்ற தனித் தகுதியும் எனக்கு இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். மருத்துவம், பொறியியல், கணிப்பொறி, சிறு தொழில்கள் அனைத்திலும் அவ்வத்துறையில் வல்லவர்களைத் தனித்தனியாக மாநில மைய அரசுகள் அழைத்து, மக்கள் வாழ்கின்ற பகுதிக்கு ஏற்ற தக்க பயன் விளையத்தக்க வகையில் செயல்பாடுகளும் அமையும் வகையில் பாடத்திட்டங்களையும் பயிற்று முறையினையும் களப்பணிகளையும் அமைத்து, அதையும் சரி பார்க்க ஓர் உயர்நிலைக் குழுவையும் ஒவ்வொரு துறைக்கும் அமைத்து ஆவன காணின் நாடு நலம்பெறும். எப்போதோ ஒருமுறை எங்கோ தலைநகரில் குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு திட்டம் தீட்டினால் பயனில்லை. இடந்தோறும், சென்று-ஊர்தோறும் நிலவும் நிலை கண்டு அவ்வந்நிலைக்கு ஏற்றவகையில் பள்ளி, கல்லூரிகள் மட்டுமன்றி, தொழிற் கூடங்களை அமைத்து அவற்றைப் போற்றிப் பாதுதாக்க