பக்கம்:கல்வி எனும் கண்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கல்வி எனும் கண்


வேண்டும். நான் மேலேகாட்டியபடி, அவ்வத்துறைகளுக்கு ஏற்ற தொழிற் கூடங்கள் இணைக்கப்பெறல் வேண்டும்; அன்றி அமைக்கப்பெற வேண்டும். இவ்வாறன்றி வெறும் தொழிற் பள்ளி, கல்லூரிகளை மட்டும் தொடங்கி விட்டால் மற்றொரு வேலை இல்லாப் பட்டாளமே உருவாகும். மேலும் நாட்டில் பல சிக்கல்களும் கொடுமைகளும் பிற இழிநிலைகளும் தோன்ற வழிவகுக்கும். நாடாளும் நல்லவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிச் செயலாற்றுவார்களாயின் நாடு நலம் பெறும். நாம் உலகத்தில் உயர்வோம். உண்மை வாழ்வும் நலமும் மலரும்.

இந்தத் தொழிற்கல்வி பற்றித் திரு. இராமமூர்த்தி குழுவினர் ஆய்ந்து தெளிந்த முடிவுகளை நெறிப்படுத்த வேண்டிப் பரிந்துரை செய்துள்ளனர் (பக். 243-248). ஒவ்வொரு வகையினையும் நன்கு ஆராய்ந்து அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என வகைப்படுத்திக் காட்டியுள்ளனர். இத்துறையில் பணிபுரிவோர் அனைவருமே இவற்றை நெறி அறிந்து போற்றல் வேண்டும். இந்தப் பரிந்துரைகளே முடிவு என்று கொள்ளவேண்டும் என நான் கூறமாட்டேன். இவை முன்னேற்றப் படிகளுள் சில. தெளியத் தெளிய, ஆராய ஆராய உலக வளர்ச்சிக்கு ஒப்ப நம் நாட்டுத் தொழிற்கல்வியும் அதற்கென அமைந்த பிற துணைநிலைக் கருவிகளும் இடமும் காலமும் பிறவும் அமையப் பார்த்துக் கொள்ளவேண்டும். சில நாடுகள் முயல்வது போன்று அறிவியல் நெறி அழிவுப்பாதைக்கு வழி கோலாமல் ஆக்கப் பாதைக்கு வழி கோலுவதாய்-உலகச் சமுதாய வாழ்வுக்கு உகந்ததாய் அமைய வழிகாண வேண்டும். யாண்டும் இன்பம் நிறைய-எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற-வையகம் வளமுற-கல்வித் துறையின் எல்லாப்பகுதிகளும் முயன்று ஒருமை உணர்வில் செயலாற்றின் நாடும் உலகமும், உய்யும் உயரும் அந்நாள் விரைந்து வருவதாக!