பக்கம்:கல்வி எனும் கண்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக் கழகங்கள்

43


முதலிய இடங்களில் உள்ளவை தம்முடன் பல கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றன. சென்னை நகரிலேயே இன்று பல்கலைக் கழகங்கள் உள்ளன. எனினும் அவை தனிப்பட்டவை. சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமே கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றது. இங்கே எல்லாப் பல்கலைக் கழகங்களைப் பற்றியும் எண்ணிப் பார்த்து எழுத இடமில்லை. முற்றும் என்னால் அறிந்து கொள்ளவும் முடியர்து. எனவே சென்னைப் பல்கலைக் கழகத்தை மட்டும் எடுத்துக் காண நினைக்கின்றேன். இது அறிவு வளம் பெற்றவனாக்கி என்னை வளர்த்துப் பெயரிட்டு உலகில் உலவவிட்ட பல்கலைக் கழகம் அல்லவா! இது பற்றி நான் காட்டும் நல்லவையோ அல்லவையோ பிறவற்றிற்கும் பொருந்தும் என்றும் கூறமாட்டேன்.

நான் முன்பே சுட்டியபடி மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களின் செயல்திறனை ஒப்பு நோக்கும்போது நாம் எங்கோ பின்னிலையில்தான் உள்ளோம். அங்கெல்லாம் பயிற்று முறையும், பாட அமைப்பும், தேர்வு முறையும், பிற செயல்முறைகளும் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளன. ஓர் ஆசிரியர்-அத்துறையில் தெளிந்த அறிவும் திறனும் உடையவர், தம் கீழ் ஒருசில மாணவரையே தெரிந்தெடுத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு பாடத்தில் தனித் திறமை காட்டும் வகையில் பயிற்றுவித்து, பாடம் போற்றி, தேவையானபோது வகுப்புகளமைத்து-நல்ல நூல் நிலையங்களில் ஆய்வு செய்யப் பணித்து, எடுத்த பொருளை நன்கு விளக்கி, உலகுக்கு உணர்த்தும் வகையில் தயாராக்கிப் பட்டமளிக்க வாய்ப்பு அளிக்கும் முறை உண்டு. இங்கோ யாரோ என்றோ வரையறுத்த பாடங்களைக் கூடிக் கூட்டமாக இருந்து, ஏதோ பேசி எப்படியோ எழுதிப் பட்டம் பெறும் நிலையினைக் காண்கிறோம். வகுப்பிற்கு வராமலேயே மாணவர் வந்ததாகக் காட்டியும், ஆசிரியர் கல்லூரிக்கு வாராமலேயே வந்ததாகக் காட்டியும் மாணவருக்கும் தமக்கும் தம்மை அறியாமலேயே பிழை புரிவோர் சிலர் உள்ளனர்.