பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

மனத்தின் தோற்றம்



மாயையின் தோற்றத்தைக் கண்ட இளைஞர்கள் இவ்வாறு கூறினராம். 'இனத்தியல்பதாகும் அறிவு என்னும் திருக்குறள் கருத்தை வைத்துக் கொண்டு சிவப்பிரகாசர் இவ்வாறு பாடலில் விளையாடியுள்ளார்.

4. கருத்து வெளியீட்டில் புதுமை

4.1 வினா எதிர் வினா விடை

ஒருவர் மற்றொருவரை நோக்கி, முனியன் ஏன் குறை வயதிலேயே இறந்து போனான்? என்று ஒரு வினா எழுப்பு கிறார் என வைத்துக் கொள்வோம். அதற்கு மற்றவர் நேரே பதில் சொல்லாமல், ‘கெட்ட பழக்கம் உடையவர்களுள் யார் நீடித்து வாழ்ந்தார்கள்? - என்று தாம் ஒரு வினா எழுப்புகிறார். இந்த வினா, ‘முனியன் கெட்ட பழக்கம் பல கொண்டவன் ஆதலின் விரைவில் இறந்து போனான்’ என்னும் விடையைத் தருவதாகும். இதற்குத் தான் ‘வினா எதிர் வினாவிடை விடுத்தல்’ என்பது பெயர். இனி நூலுக்கு வருவோம்.

மாயை கோயிலுக்குச் சென்ற போது அவளுடன் மிகவும் அழகிய மகளிர் பலர் சென்று கொண்டிருந்தனர். இவர்களைக் கண்ட இளைஞர் பலர் ஒருவர்க்கொருவர் இவர்கள் தொடர்பாக உரையாடிக் கொண்டனர். ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, ‘கூட்டமாக வரும் இப்பெண்களுள் அழகில் மிகவும் சிறந்தவள் யார்?’ என வினவினானாம். அவ்வினாவிற்கு விடையாக, ‘வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் என்னும் முக்கனிகளுள் மிக்க சுவையுடைய கனி எது என்று கூறுவாய்?’ என்ற வினா வந்தது. அதாவது, முக்கனிகளுள் எல்லாமே ஒத்த சுவை உடையன ஆதலின், இன்னதுதான் சுவை மிக்கது என்று சொல்ல முடியாதது போல், இந்தப் பெண்கட்குள்ளும் இன்னாரே மிக்க அழகுடையவர் என்று சுட்டிக் கூறமுடியாது என்பது உரிய பதிலாகும். பாடல்: