பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மனத்தின் தோற்றம்



மூளையில் பல மடிப்புகள் உள்ளன. மனிதன் ஐம்பொறி புலன்களால் அறிந்த செய்திகள் அனைத்தும் அவ்வப்போது மூளையில் பதிவாகி விடுகின்றன. மேலோடு கவனம் செலுத்திய செய்தி, மேலோடு மூளையில் பதிவாகிறது; இது விரைவில் மறந்து போகக் கூடும் - விரைவில் நினைவுக்கு வராமலும் இருக்கக் கூடும். ஆனால், ஆழ்ந்து கவனிக்கும் செய்தி மூளையில் நன்றாகப் பதிவாகிறது; விரைவில் மறக்காது - விரைவில் நினைவுக்கு வரும், தாளின் மீதோ - வேறு எதன் மீதோ பல முறை மேலும் மேலும் எழுதினால் ஒன்றும் படிப்பதற்குப் புரியாது. ஒருமுறை எழுதியதை அழித்தால்தான், மறுமுறை எழுதுவது புரியும். அதேபோல, நாடாவில் (டேப் ரிகார்டர் -Tape Recorder) ஒலியை ஒரு முறை மட்டும் பதிவு செய்தால்தான், மீண்டும் அவ் வொலியைக் கேட்க முடியும். இன்னொரு முறை அதிலேயே ஒலியைப் பதிவு செய்ய வேண்டுமெனில், முதலில் செய்த பதிவை அழித்த பிறகே மறு பதிவு செய்ய முடியும் - கேட்கவும் முடியும். நம் மூளை மேற்கூறிய பொருள்கள் போன்றதன்று; ஆண்டுக் கணக்கில் புதிய புதிய செய்திகள், மேலும் மேலும், மூளையில் எத்தனை முறை பதிவாகிக் கொண்டிருந்தாலும், அத்தனை செய்திகளும், குழப்பம் இன்றி, எப்போது வேண்டுமானாலும் நினைவுக்கு வரும்; எல்லாம் தெளிவாகவே இருக்கும். இத்தகைய வியத்தகு ஆற்றலும் அமைப்பும் மூளைக்கு உண்டு.

எனவே, ஒருவன் இரவில் இருளில் - தனி அறையில் - தனியாகப் படுத்துக்கொண்டு, மூளையில் முன்பு பதிவாகி யுள்ள எத்தனை செய்திகளை மாறி - மாறி நினைத்தாலும், அத்தனை செய்திகளும் மாறி - மாறி நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கும். இங்கே துண்டல் எதுவும் இல்லையே என்று வினவலாம். ஏன் தூண்டல் இல்லை! அவன் அன்றைக்கு அனுபவித்தவை தொடர்பான சூழ்நிலையும்,