பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

69



விட்டன. கலம்பக நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றத் தொடங்கிவிட்டன என்பதும், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், நந்திக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முதலிய கலம்பகங்கள் கலம்பக நூல்களுக்குள் மிகவும் பழமையானவை என்பதும் தமிழிலக்கிய ஆராய்ச்சி வல்லுநர்கள் நன்கறிந்த செய்தி களாம். ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பி யாண்டார் நம்பி இயற்றியது. அவர் பதினோராம் நூற்றாண்டினர். எனவே, திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம். இவ்வகையில் பார்க்குங்கால், மாணிக்கவாசகருக்குச் சிலவாண்டுகளாயினும் முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்று கூறமுடியுமே.

மேலும், தேவர் என்னும் பட்டப் பெயரைப் பார்க்கும் போது, இவர் சமணராயிருந்து பிறகு சைவத்திற்கு மாறினதாகத் தெரிகிறது. தேவர் என்பது சமணமுனிவரைக் குறிக்கும் பெயராகும். சீவக சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்க தேவர், சூளாமணி யாசிரியராகிய தோலா மொழித் தேவர் ஆகிய சமணப் பெரியோர்களின் பெயர் களை ஈண்டு ஒப்பு நோக்குக. திருத்தக்க தேவரும் தோலா மொழித் தேவரும் எட்டு அல்லது ஒன்பதாம் நூற் றாண்டினராக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் காலத்தையொட்டியவராகத் தொல்காப்பியத் தேவரையும் கொள்ளலாம். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை - அதாவது அப்பரடிகள் காலத்திலிருந்து மணிவாசகர் காலம் வரை, சைவ சமணப் புத்த மதப் போராட்டங்கள் கடுமையாக நடந்ததும், சமண. புத்த மதங்களைப் பின்பற்றியிருந்தவர்கள் சைவத்திற்கு மாறினதும் அறிந்த செய்திகளே. எனவே, தொல்காப்பியத்