பக்கம்:அஞ்சலி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 207

காரியையும் அவளையும் தவிர அறையில் ஒருவரும் இருக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துவிட்டாள். பிரசவமும் ஆயிற்று. ஆனால் கடைசி சமயத்தில் எக்கச் சக்கமாய் ஏதோ நேர்ந்துவிட்டது. மருத்துவச்சி வெளியே வந்து ஒரு நிமிஷம் மிரள மிரள விழித்தாளாம். பிறகு உள்ளே போனாளாம். உடனே ஒரு பெரிய அலறல் கேட்டது. குழந்தை கத்திக்கொண்டு விழுந்துவிட்டது. ஆனால் அம்மா மூடிய கண் திறக்கவேயில்லை.

“அதனால் எது நிற்கிறது? நாட்களாயின. பத்து வருஷங்கள். என் தகப்பனார் மறு கலியாணம் பண்ணிக் கொண்டுவிட்டார். எனக்கு மாற்றாந் தம்பிகளும் தங்கைகளும் பிறந்துகொண்டேயிருந்தனர்.

“நான் ஒருநாள் மாலை இடுப்புமுண்டைத் தலையில் கட்டிக்கொண்டு, கோவணமும் அரையுமாய், எங்கள் வீட்டுத் தெருக்கோடியில் ரோஷத்துடன் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தேன். எதிர் வீட்டுத் திண்ணையில் அம்பட்டனின் தாயார் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவளுக்குக் கண் தெரியவில்லை. வயது மரங்களுக்கு ஆகிறமாதிரி ஆகிவிட்டது. முகம் பூரா, வருடங்களின் பாளங்கள்.

என் குரலைக் கேட்டதும் என்னைக் கூப்பிட்டாள்.

“யாரு என்னையா கூப்பிட்டே?”

“ஆமாம், நீ என்ன அரசமரத்து அய்யர் வீட்டுப் பிள்ளைதானே?”

“ஆமா!” (எங்கள் வீட்டில் அரசமரம் ஒன்றும் காணோம். ஆனால் பேர் என்னவோ அப்படித்தான்.)

“இங்கே வா.”

“இப்படிக் குந்து; உங்கிட்டே ஒண்ணு சொல்லணும். உன் ஆத்தாள் குரலாட்டம் இருந்தது. அதனால்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/217&oldid=1026489" இலிருந்து மீள்விக்கப்பட்டது