பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அண்ணாவின் ஆறு கதைகள்


கோயில் நிர்வாகிக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தாள், கச்சேரி நடந்தது. கேட்டு ரசித்தாள். முடிவில் வித்வானைக் கும்பிட்டு, வீட்டிற்கு அழைத்தாள். அன்று கிருஷ்ணன் சில பழைய உருப்படிகளை வாசித்திருந்தான். கிரஹப் பிரவேசமானதும், கிருஷ்ணன், தன் வித்தையின் திறமையை விளக்குவதிலே கண்ணுங் கருத்துமாக இருந்தான், சில கீர்த்தனங்களைப் பாடம் செய்துகொள்ள விரும்பினாள் அமிர்தம். குழல் இருந்தது, குரல் கிடையாது கிருஷ்ணனுக்கு. எனவே குழலிலே வாசித்துக் காட்டி அமிர்தம் குரலிலே அதைப் பொருத்திப் பாடிக் காட்டி உருப்படி பாடமாவது சிரமமாகவுமிருந்தது, நாளும் பிடித்தது. பாரிஸ்டருக்கும் கோபம் வளர ஆரம்பித்தது.

“இது யார் அமிர்தா, ஒரு கிராக்! அவன் குழலும் குரலும் மகா வேதனையாக இருக்கே. என்ன, இங்கேயே அவன் குடியேறிவிட்டானா? பாதி ராத்திரியிலே எழுந்து உட்கார்ந்து கொண்டு ஊத ஆரம்பித்து விடுகிறானே. உனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கா” என்று ஆரம்பித்தவர் நாளாகவாகச் சுருதியை உயர்த்தினார். இரண்டோர்நாள் அமிர்தத்தின் முதுகிலே பாரிஸ்டர் தாள வரிசையும் பழகினார்!

“அனாவசியமாக வம்பு செய்கிறார். வீணாக சந்தேகம் வைத்துக்கொள்கிறார். வேதனையாக இருக்கிறது” என்று கஷ்டப்பட்டாள் அமிர்தம். சங்கீதத்தின் விளைவாகச் சச்சரவு நடைபெற்றது.

“ஆமாம்! அந்த ஆள் இங்கேதான் இருப்பான், அதை நீங்கள் தடை செய்யக் கூடாது” என்று ஒரு நாள் அமிர்தம் துணிந்து கூறினாள், பாரிஸ்டரின் சுபாவத்தைத் தெரிந்துகொள்ளாமல், பாரிஸ்டர் நவநீத கிருஷ்ணன் கோபமாகப் போய் விட்டார்.

பாரிஸ்டர் நவநீத கிருஷ்ணன், லீலாவின் மாமன், சித்ரபுரிச் சீமான் சிவந்தபாதத்திற்கு இரண்டு மக்கள்.