பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றவாளி யார்?

59



“கிளம்புவீங்கன்னு தெரியுமே எனக்கு! அந்தக் கோண வகுடுக்காரியைக் கண்டாத்தான் நீங்க கொளையற வழக்கமாச்சே. இந்தப் பாழாப்போன கண்ணு என்னா குருடாவாப் போச்சி. அவளும் பல்லைக் காட்டுவா, நீங்களும் வளையறதும் நெளியறதுமா இருப்பீங்க. நான் காணாததா இந்த கூத்து! அதனாலேதான் பாவம், உருகுது உங்களுக்கு. அவளுக்கு எஜமான் தண்டனெ தரக்கூடாதுன்னு தோணுது,”

“சரிதான் கிட்டி! நான் ஒரு பாவமும் அறியேன்.”

“அதுவுந்தான் தெரியும் எனக்கு. கூத்தாடிப் பார்த்தீங்க, பலிக்கலே!”

“கிடக்குது போ, மருதாயி, உன்கிட்ட இப்பச் சொல்லிப் போடறேன் நிஜத்தை. எனக்கும் அந்தப் பெண் மேலே கொஞ்ச நாளா கண்ணுதான்... இப்ப இல்லை ... அது உன்னைக் கட்டிக்கிறதுக்கு முந்தி......”

“சொல்றதுன்னு ஆரபம்பிச்சி, ஏன் பொய்யைக் கொட்டறிங்க, அவத்தான், என்னைப் பாக்கிற போதெல்லாம் கேட்பாளே, பெரிய சீமாட்டிபோலே. அது ஒரு தினுசா பேசுவா அடி மூச்சு கலந்து, " “ஏண்டிம்மா, உன் வீட்டுக்காரரு சௌக்கியமாடிம்மா”ன்னு.

“அப்படியா கேட்பா? ஆமா, நீ ஒருநாள் கூட என் கிட்டச் சொன்னதே இல்லையே.”

மாளிகைக் கூடத்திலேயோ, வழக்கை விசாரிக்கப்போய் விசாரத்தை வரவழைத்துக்கொண்ட மல்லீசுரர், எப்போதும் போல, திருவாசகத்தை, இனிய, மெல்லிய குரலில் படித்துக்கொண்டிருந்தார். படித்தார் என்று கூடக் கூறுவதற்கில்லை. அவருக்குத் திருவாசகம் மனப் பாடம் — எனவே பாராமலே பாடிக்கொண்டிருந்தார்