பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104


"குழந்தையா? யார் குழந்தை? தங்கள் குழந்தையா?’ என்று கேள்விமேல் கேள்வியை அடுக்கினார் மன்னர்.

சர்க்கரைப் புலவருக்கு ஒரு குமாரன் இருந்தான். அவன் இளம் பருவத்தினன். ஆண்டில் இளையவனாலும் அறிவில் சிறந்தவனாக இருந்தான். இலக்கண இலக்கியங்களைத் தன் தந்தையாரிடம் பாடம் கேட்டு வந்தான். கவிபாடும் ஆற்றல் அவனிடம் இருந்தது. தந்தையாரைப் போலவே சித்திர கவிகளை இயற்றும் திறமையும் அவனிடம் அமைந்தது. அவனையே சர்க்கரைப் புலவர் குழந்தை என்று குறிப்பிட்டார்.

அந்தக் குட்டி நாகபந்தத்தைச் சர்க்கரைப் புலவருடைய குழந்தை எழுதியிருக்கிறான் என்பதைப் பாண்டியர் அறிந்தபோது அவருக்கு வியப்புத் தாங்க வில்லை. அந்தக் குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. "குழந்தையை நான் பார்க்கவேண்டும். அரண்மனைச் சிவிகையை அனுப்பட்டுமா?" என்று கேட்டார்.

புலவர் சற்றே தயங்கினார். அவருக்கு ஒரு பயம். தம் குமாரன் வந்து பாண்டியர் பார்வையில் பட்டால் அவனுடைய இளம் பருவத்தைக் கண்டு, 'இவ்வளவு சிறியவன பாடினன்?’ என்று மன்னர் வியப்பார். 'அவர் கண் பட்டுவிட்டால் என்ன செய்வது? அது மிகவும் கொடியது என்று சொல்வார்களே!' இப்படி எண்ணிப் புலவர் தடுமாறினர்.

“சமூகத்தில் அந்தக் குழந்தையிடம் பிறந்த கருணைக்கு நான் எழுமையும் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் விளையாட்டுப் பிள்ளை; எங்கேயாவது போய் விளையாடிக் கொண்டிருப்பான். நானே அவனைப் பிறகு ஒரு நாள் அழைத்துவருகிறேன்" என்றார் புலவர்.