பக்கம்:அறவோர் மு. வ.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அறவோர் மு. வ.

நிமிர்ந்த நன்னடையும் எங்களை ஆட்கொண்டன. ‘திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை முதல் பாடமாகத் தொடங்கினார். தமிழ்த்தெய்வமான முருகனை இலக்கிய உலகில் அவர் அறிமுகம் செய்த விதமே தனிச் சிறப்புடன் திகழ்ந்தது. அதை அடுத்து ‘நம்பி அகப்பொருள்’ என்ற இலக்கண நூலைப் பாடம் சொல்லி விளக்கினார். ஆம், தேனில் இனிமையைக் குழைத்துச் செந்தமிழ்ப் பாலினை ஊட்டத் தொடங்கினார். அள்ள அள்ளக் குறையாத அமுதை வாரி வாரி வழங்கினார். ஐந்து ஆண்டுகள் போனதே தெரியவில்லை.”

கண்டறியாதன வெல்லாம் கண்முன் காட்டி, விளக்கம் ஊட்டி மாணவர் மனத்தைத் தெளிவுறச் செய்வது மு. வ. அவர்களின் பாடஞ் சொல்லும் முறை. ஒரு சமயம் புன்கம் பூக்களைக் கொண்டு வந்து மேசை மேல் வைத்து, “‘பொரிப்புன்கு’ என்றாரே சங்கப் புலவர்; பாருங்கள் - சிந்திக் கிடக்கும் புன்க மலர்களை! தெரியாமல் அயர்ந்து போய், பொரி என்று வாயில் போட்டுக் கொள்ள யாரேனும் நினைத்தாலும் வியப்பதற்கில்லை. பாருங்கள் இலக்கியப் புலவரின் கூரிய கலைப் பார்வையை” என்று அவர் குறிப்பிட்ட பொழுது, அவர் பாடம் பயிற்றலும் வகையும் திறமும் ஒருசேர விளங்கின.

டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு - எடுத்து மொழிய முடியாத அளவிற்கு ஆழ்ந்த தமிழ்ப் பற்றாளர் என்பதனை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் மிக நன்றாக அறிவார்கள். தம் தந்தையின் தமிழறிவு சரிவர அமையவில்லையே என வருந்தி அவரே குறிப்பிடும் இடம் அவர் மொழிப் பற்றுக்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாகும். அவரே இதனைக் குறிப்பிடக் காணலாம்.

“எனக்கு ஒரு பெரிய குறை உண்டு. நான் வெளியூர்க்குச் சென்ற பிறகு அவர் எழுதிய கடிதங்களைப் படிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/125&oldid=1224185" இலிருந்து மீள்விக்கப்பட்டது