பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஒரு ஆர்மேனியன் குழந்தைப்....... சில காட்சிகள்

சீக்கிரமே, முன்னேறிச் செல்கிற ஒட்டகத்தின் சீரான ஆட்டத்தைத் தொடர்ந்து மணிகளின் கிண்கிணி நாதம் ஒலிக்கிறது. ஒட்டகக் கூட்டம் மேலே செல்கிறது.

இரவு பகலாக அது தன் வழியே செல்கிறது. சாமான்களை இறக்க, பண்டமாற்றுச் செய்ய, சரக்குகளை விற்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறபோதுதான் அது ஒய்ந்து நிற்கிறது. பிறகு மறுபடியும், அது தன் பயணத்தைத் தொடர்கிறது.

இரவின் ஆழ்ந்த அமைதியினூடு ஒட்டகக் கூட்டம் நகர் வந்து சேர்கிற சமயங்களில், மேகமின்றி நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தின் கீழே வெகுதூரத்திலிருந்து அலைமோதி வருகிற சின்னஞ்சிறு மணிகளின் கிண்கிணி நாதத்தை நாங்கள் கேட்போம். மந்தகதியில் ஊர்ந்து அது நெருங்கி நெருங்கி வரும். ஒட்டகத்தின் சொந்தக்காரர்கள் அரைத் துக்கத்தோடு ஒட்டகங்களின் சீரான அசைவுக்குத் தக்கவாறு ஆடி அசைவார்கள். எங்கள் நகரின் சதுக்கம் ஒன்றில் வந்து ஒட்டகக் கூட்டம் நிற்கிறவரை அது நிகழும். எங்கும் நிற்காமலே போய்க்கொண்டிருந்தால், அதுவும் தொடர்ந்து நிகழும். மணியோசை படிப்படியாகத் தேய்ந்து, எங்கள் நட்சத்திர மயமான ஆகாயத்தின் ஆழத்தில் புதைந்துபோகும்.

***

எங்கள் தெருவுக்கு அப்பால் உள்ள சதுக்கத்தில் மூன்று நாட்களாக ஒட்டகக் கூட்டம் ஒன்று தங்கியிருக்கிறது. ஒட்டகக் காவலனின் ரோம உடைகள், பிசைந்த மாவு, ஒட்டக ரோமம் ஆகியவற்றுக்கே உரிய இயல்பான மனம் காற்றில் நிலவி நிற்கிறது. ஒட்டகங்களின் களைப்புற்ற குரல்களும் அமைதியான பார்வைகளும் அங்கே நிரம்பியிருக்கின்றன. ரோமங்களால் வேயப்பட்ட காவலர் கூடாரங்கள் நன்கு நிறுவப்பட்டிருக்கின்றன. மாலை வேளைகளில் நெருப்புகள் மூட்டப்படுகின்றன. காவலர்கள் தங்கள் ஒட்டகங்களுக்கு உணவு அளித்து, அவற்றிடம் அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் உரக்கச் சிரிப்பதில்லை; புன்னகை மட்டுமே புரிகிறார்கள். லேசான சோபையற்ற புன்முறுவல் அவர்களது முகங்களில் தோன்றிய உடனேயே மறைந்தும் போகின்றன. ஆனால், ஒரு பாலைவன மனிதனின் பார்வை நெருப்புமயமாக இருக்கிறது; அவனுடைய கண்கள் கதிரொளியோடு சுட்டுப் பொசுக்குகின்றன; எப்போதும் உயிர்ப் போடும் 'பேசும்பான்மை'யிலும் உள்ளன. பாலை மனவின் சூட்டையும் அமைதியையும் அவை நமக்குக் கொண்டு தருகின்றன.