பக்கம்:இன்னொரு உரிமை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100சு. சமுத்திரம்

இதுவரை பொறுமையாக இருந்த முத்துலிங்கம், இப்போது பூகம்பம்போல் வெடித்தான்.

“எம்மா என்னைப்பத்தி வேணும்னா பேசு! அண்ணனைப்பத்தி பேசினால் கெட்ட கோவம் வரும். பெரிசா படிக்கவச்ச மாதிரி பேசிறியே. கவர்ண்மெண்டு பணத்துலேதான் அவன் படிச்சான். கஷ்டப்பட்டு படிக்கிறவங்க வேலை கிடச்சதும், கஷ்டத்தை நீக்குறதுக்குப் பதிலாகக் கஷ்டப்பட்ட தங்கள் குடும்பத்தையே நீக்குற காலம் இது. பெரிய இடத்திலே பெண்ணை கட்டிக்கிட்டு, அப்பா, அம்மா குடும்பத்துகாரங்களை சின்ன இடமாய் நினைக்கிற காலம் இது. கீழத்தெரு பெருமாள்பாண்டி அப்பன் அவனோட ஆபீசுக்குப் போயிருக்கும்போது, அவரை வேலைக்காரன்னு அடுத்தவங்ககிட்டே சொன்னானாம். அந்த மாதிரியா நம்ம அண்ணன்? மாசா மாசம் இருநூறு ரூபாய் அனுப்பறான். நாலாயிரம் ரூபாய் சேர்த்துவச்சுக்கிட்டு, என்னை மெட்ராசிலே கடை போட கூப்பிடறான்... அவனைப் போயா இந்தக் கேள்வி கேட்கிறே?”

“உனக்கு அவன் உபகாரம் செய்யறதால அண்ணன். ஆனால், எனக்கு அவன் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் பிள்ளை. இதை மறந்திடாதல! ஒரு வருஷமா அவனை பார்க்கமுடியாம நான் படுற பாடு, உனக்கு என்ன தெரியும்? நான் பெத்த பிள்ளை என் கண்ணுக்குள்ளே நிக்கான். இந்தச் சமயத்திலே உன்னையும் விட்டுட்டு நான் எப்படிடா இருக்க முடியும்?”

“உன்னை யாரும்மா இருக்கச் சொல்றது? உன்னையும், தங்கச்சியையும் வரச்சொல்லித்தான் லெட்டர் போட்டான் மெட்ராசிலே ஒரே குடும்பமா இருக்கலால்ல்லா? கேட்கியா? நீதான வரமாட்டேக்க.”

“எருது நோவு காக்காக்கு என்னடா தெரியப்போகுது? இந்த ஊரையும், வீட்டயும், நிலத்தையும் விட்டுட்டுப் போவ முடியுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/109&oldid=1368472" இலிருந்து மீள்விக்கப்பட்டது