பக்கம்:இன்னொரு உரிமை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162சு. சமுத்திரம்

புதிய ஒலைகளை அந்தக் கம்புகளோடு கோத்துக் கட்டி விட்டு எங்கேயோ ‘துஷ்டி’ கேட்டுவிட்டு வந்த அம்மா குளிப்பதற்காக மீண்டும் இரண்டு குடந் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு மீண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

இத்தனை வேலைகளையும் ‘போனஸாகச்’ செய்து விட்டு, நாள் முழுவதும் வயக்காட்டில் கூலி வேலைக்குப் போகும் அவளுக்கு, அன்று கையைக் காலை கட்டிப் போட்டதுபோல் இருந்தது. ‘ஓய்வு’ அவளை ஓய்ந்துபோகச் செய்தது.

இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வேலை இருக்காது. கம்மாவில் விதைப்பு வேலையும் நஞ்சை நிலமான வயலில் ‘பல்லாரி’ நடவும் துவங்க மூன்று நாட்களாவது ஆகும். அதுவரைக்கும் எப்படிச் சும்மா இருப்பது? வீட்டு வேலைகளைத் தவிர வேறு வேலை இல்லாமல் எப்படிப் பொழுதை ஓட்டுவது? சாயங்காலத்தில் கன்றுக்குட்டிக்குப் புல் வெட்டப் போகலாம். மீண்டும் தண்ணீர் பிடிக்கப் போகலாம். மீண்டும் முற்றத்தைத் தெளிக்கலாம். மீண்டும் அடுப்பைப் பற்ற வைக்கலாம். ஆனால் அந்த மத்தியானப் பொழுது போகமாட்டங்கே? ‘கரி முடிவாங்க’ சீக்கிரமா வயல் வேலயத் துவக்கினால் என்ன? நமக்குன்னு ஒரு வயலு. இருந்தால்... இப்பவே போய் நடலாம். இந்த ஊர்க்காரங்க அறுவடய தின்னப் பிறவுதான் வயல நினைப்பாங்க போலுருக்கு.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் அய்யாவுக்கு, வெந்நீர் ஒத்தணம் கொடுக்கலாமா என்று நினைத்து பிறகு மத்தியான வெயிலுல கொடுக்கலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது பக்கத்துக் காரை வீட்டிற்கருகே இருக்கும் வேப்பமரத்தடியில் இருந்து பெண்களின் சிரிப்பு சீறிக்கொண்டு வந்தது. எதுக்கு இப்படிச் சிரிக்காளுவ... போயித்தான் பாப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/171&oldid=1368830" இலிருந்து மீள்விக்கப்பட்டது