பக்கம்:இலக்கண வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

‘உரை நடந்து வந்த முறை’ என்னும் வகையைத் தொடங்கும் அவரே உரையாசிரியர் குறித்து ஓரையத்தை உரைத்து மறுமொழி தருகின்றார்:

“உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்கு உரை என்பாரும் உளர். அவர் செய்திலர்; மெய்யுரை கேட்டார் என்க. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரை கண்டு குமாரசுவாமியாற் கேட்கப்பட்டது என்க” என்கிறார். உரையாசிரியர் நக்கீரனாராக இருப்பின் அவர் தம்மைத் தாமே இப்படிக் கூறிக் கொள்வரா? கொள்ளார் என்பது கொண்டு உரை நடந்து வந்தவாறு சொல்லுதும் எனத் தொடங்குகிறார்:

“மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் படியங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார்; அவர் மணலூர் ஆசிரியர் புளிங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார்; அவர் மாதளவனார் இளநாகனார்க்கு உரைத்தார்; அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். இங்ஙனம் வருகின்றது உரை" என்பது அது.

இதனை அப்படியே ஏற்றுக் கொள்வதாயினும் ஒருவர் செவிவழி ஒருவர் கேட்டு வந்ததாகக் கொள்வதாயினும் முதற்கண் உரைகண்ட மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரையெனக் கொள்வதற்கு இல்லையாம். ஏடு பார்த்து எழுதுவதிலேயே பாட வேறுபாடுகள் எத்துணை? விடுபாடுகள் எத்துணை? சேர்வைகள் எத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/218&oldid=1472505" இலிருந்து மீள்விக்கப்பட்டது