பக்கம்:இலக்கண வரலாறு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

அமைப்புப் புதுமை

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உழிஞை நொச்சி தும்பை ஆகிய ஏழு திணைகளும் புறத்திணைகள் என்றும், வாகை பாடாண் பொதுவியல் ஆகிய மூன்று திணைகளும் புறப்புறத் திணைகள் என்றும் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. தொல்காப்பியர் கரந்தையைத் தனித் திணையாகக் கொள்ளார்; வெட்சியுள் அதனை அடக்குவார். அவ்வாறே நொச்சியை உழிஞையுள் அடக்குவார். பொதுவியல் எனக் கொள்ளார். கைக்கிளை, பெருந்திணை என்பன அகத்திணை சார்ந்தவையாக வைப்பார். ஆகப் பொருள் வகை பழமைப்பட்டனவே எனினும் அமைப்பு வகை மாறுபட்டன என்க.

”கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்—பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தான் என் ஏறு”

என்பது பழம்பாடற்பிழிவு, சுதையாய், நாடகமாய், பாவிகமாய்ப் புனைந்து கொள்ளத்தக்க பொருளை யுட் கொண்ட பாடல் (176).

குற்றுழிஞை என்பதனை முக்கொளுக்களால் விளக்குகிறார் :

”கருதாதார் மதிற்குமரிமேல்
ஒருதானாகி இகன்மிகத் தன்று”

”வளைஞரல வயிரார்ப்ப
மிளைகடத்தலும் அத்துறையாகும்”

”பாடருந்தோற் படைமறவர்
ஆடலொடடையினும் அத்துறையாகும்”
(107-109).

இவ்வைப்பு முறையும் கொளுவமைப்பும் அகத்துறை நூல்கள் சிலவற்றில் அமைந்துள்ள துறை விளக்சுக் கொளுக்களுக்கு முன்னோடி எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/252&oldid=1473284" இலிருந்து மீள்விக்கப்பட்டது