பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீவகன் விடுத்த தூதன்

117

தேவனையே சேரனிடம் தூது விடுக்குமாறு பாண்டியனைத் தூண்டினான். சேரனுக்குச் சினத்தை விளைத்துப் பாண்டி நாட்டின்மீது படையெடுத்து வருமாறும் செய்துவிட்டான்.

உண்மைக் காதலின் வெற்றி

போரிலே பாண்டியன் தோல்வியுற நேர்ந்தது. அவ்வேளையிலும் அவன் குடிலன் கூற்றையே மெய்யென நம்புகிறான். அவனது சூழ்ச்சியால் மனோன்மணியைப் பல தேவனுக்கு மணஞ்செய்விக்க மன்னன் துணிகின்றான். மனோன்மணியும் கடமையுணர்ச்சியின் காரணமாக அதற்கு இசைகின்றனள். நள்ளிரவில் மணவறையில் சுந்தர முனிவர் மணச்சடங்கினை கடாத்த, மனோன்மணி பலதேவன் எதிரே மணமாலை தாங்கி வந்து நிற்கின்றாள். அந்த மணவேளையில் சேர வேந்தனாகிய புருடோத்தமன், கொடிய வஞ்சகனாகிய குடிலனுக்கு விலங்கு பூட்டி, அவன் காட்டிய சுருங்கை வழியே அரண்மனையுட் புகுந்து மனோன்மணியின் கண்ணெதிரே காட்சியளித்தான். கனவிற் கண்ட காதலனைக் கண்ணுற்ற பெண்ணரசியாகிய மனோன்மணி, அன்னவனுக்கே மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள். உண்மைக் காதல் வெற்றியுற்றது.

நூலின் தத்துவ உண்மைகள்

இவ்வரலாற்றை நாடக முறையில் வகுத்துக் காட்டும் ஆசிரியர் தத்துவப் பொருள்களை உள்ளுறையாகக் கொண்டு நூலை ஆக்கியுள்ளார். சீவகனைக் குடிலன் தன் வயப்படுத்தி ஆட்டுவித்தல், சீவான்மாவை மாயை ஆட்டுவிக்கும் திறமேயாகும். அருட்குரவருடைய அறவுரைகளைப் பாண்டியன் நம்பாதவாறு