பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இலக்கியத் தூதர்கள்

தமிழில் அவரால் உருவாக்கப் பெற்ற பெருங் காவியமாகிய சிலம்புச் செல்வம் பல்லாற்றானும் முதன்மை பெறும் நல்லியல்புற்றது.

மாதவியின் மாண்பு

கண்ணகியின் கற்பு மாண்பைப் பொற்புற விளக்க வந்த இப்பெருங்காவியத்தில் வரும் சிறப்புடை உறுப்பினர் பலர். அவருள்ளே கண்ணகிக்கு இணையாக வைத்து எண்ணத்தக்க கற்பரசியாய் மாதவியென்னும் மங்கை நல்லாள் விளங்குகின்றாள். சோழ நாட்டுப் பெருநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்து நாடகக் கணிகையருள் ஒருத்தியாகிய சித்திராபதி யென்பாட்கு மகளாகப் பிறந்தவள் இம் மாதவி. இவள் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று துறையிலும் ஒரு குறையுமின்றி நிறைவுற்று விளங்கினாள். ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வயது வரையில் ஆடலும் பாடலும் அருந்தமிழ்க் கல்வியும் நன்கு பயின்று தேர்ந்தாள். பன்னிரண்டாண்டுப் பருவத்தில் மாதவி கலைநலஞ் சான்ற எழில்நிறை தலைவியாய்க் காட்சியளித்தாள்.

மாதவியின் கலையரங்கேற்றம்

கரிகாற் பெருவளத்தானாய சோழ மன்னன் முன்னால் மாதவியின் கலையரங்கேற்றம் கவினுற நடைபெற்றது. நாடக அரங்கம் மிகச்சிறந்த முறையில் அமைக்கப் பெற்றிருந்தது. அஃது ஓவியத் திரைகளாலும், ஒளி நிறை விளக்குக்களாலும், வியத்தகு விதானங்களாலும், மணந்தரு மாலைகளாலும் அணி செய்யப்பட்டிருந்தது. நாட்டிய ஆசிரியன், இசையாசிரியன், தமிழாசிரியன், தண்ணுமை ஆசிரியன், குழ