பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஈரோடு மாவட்ட வரலாறு


(1489–1500) வலப்பக்கம் தடப்பள்ளி, இடப்பக்கம் அரக்கன்கோட்டைக் கால்வாய்களையும் வெட்டினார். இவற்றால் முறையே 17654 ஏக்கரும்,6850 ஏக்கரும் பாசனவசதி பெறுகின்றன.

அமராவதியாற்றில் தடுப்பணைகள் கட்டி அலங்கியம், கொளிஞ்சிவாடி, கண்டக்காம்பாளையம், தளவாய்ப்பட்டணம், தாராபுரம், நஞ்சைக் கல்குறிச்சி, நஞ்சைத் தலையூர் ஆகிய ஊர்களில் கால்வாய் வெட்டிப் பாசனத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளனர். இவற்றின் மூலம் 6812 ஏக்கர் வேளாண் நிலங்களுக்கு நீர்பாய்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் அந்தியூர், ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், ஓடத்துறை, கந்தாங்கண்ணி, காடம் பாறைப்பள்ளம், கெட்டி சமுத்திரம், செம்மண்பதி, தண்ணீர்ப்பள்ளம், பிரமதேசம், முரளி, வேம்பத்தி ஆகிய இடங்களில் பெரிய ஏரிகள் பராமரிக்கப்படுகின்றன. இவையன்றிச் சிறுசிறு ஏரிகளும் குளங்களும் பல உள்ளன. அவைகளை ஊராட்சிகள் பராமரிக்கின்றன.

புதிய திட்டங்கள்

விடுதலைக்குப்பின் தமிழகத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய நீர்ப்பாசன அணை கீழ்பவானி அணையாகும். சத்தியமங்கலத்தின் மேற்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் பவானியுடன் மோயாறு கலக்குமிடத்தில் உள்ள இந்த அணை உலகில் மிகப்பெரிய மண் அணையாகும். மையப்பகுதி 1523 அடிக்கு வலப்புறம் 4 கி.மீ. தூரமும் இடப்புறம் 5 கிலோ மீட்டர் தூரமும் மண் அணை உள்ளது. 1947இல் தொடங்கி 1954ஆம் ஆண்டு இது முழுமையாக முற்றுப் பெற்றது. இதனால், சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், பவானி, பெருந் துறை, ஈரோடு, காங்கயம், தாராபுரம் வட்டங்களிலும் கரூர் மாவட்டத்தில் சிறு பகுதியுமாக 207000 ஏக்கர் வேளாண் நிலப்பரப்பு பாசனம் பெறுகிறது.

பொதுப்பணித் துறையினரால் இம்மாவட்டத்தில் தொடங்கி முடிக்கப்பட்டுப் பாசனம் பெறும் திட்டங்கள் உப்பாறு அணை, ஒரத்துப்பாளையம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, சின்ன முத்தூர்