பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

207


'காலிங்க ராயன் கடாட்சத்து னாலே
சாலவே இந்தத் தரணியில் வாழும்
குடியான வர்கள் கூடிய சபையில்
வடிவான பள்ளை வந்துமே ஆடிய
சஞ்சீவி தனக்கு சதிருடன் செம்பொன்'

கொடுத்ததாக அய்யனரப்பன் பள்ளு கூறுகிறது. அவினாசிப் புலவர் என்பவர் கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு தான் ஒருவராகவே நொண்டி நாடகத்தை ஆடியதைப் பார்த்த முதியவர்கள் பலர் இன்னும் திங்களூரில் இருக்கின்றனர். ஆண்களால் பல கோயில்களில் 'ஒயில் கும்மி' ஆடிக் காட்டப்படும் வழக்கம் இருந்தது.

திரைப்படத்துறை

ஈரோட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே 'நாடகம் சினிமா பார்க்கிறவர்கள் சங்கம்' என்பது தொடங்கப்பட்டது. 'திராவிட நடிகர் சங்கம்' ஈரோட்டில் ஏற்படுத்தப்பட்டு அதன் உறுப்பினர் சிலர் திரைப்படத்திலும் நாடகத்திலும் நடித்துள்ளனர்.

ஈரோடு கேசவலால் காளிதாஸ் சேட் 'காளிதாஸ் பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் பம்பாய் மெயில், மெட்ராஸ் மெயில், கண்ணப்ப நாயனார், மேனகா போன்ற திரைப்படங்களை எடுத்தார். மேனகா திரைப்படத்தில் முதன்முதலில் பாரதியார் பாடலைப் பாடவைத்தார். ஈரோடு ராஜலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 'தேசிங்கு ராஜன்' என்ற திரைப்படத்தை எடுத்தனர். இவர்கள் 'தமிழ் பேசும் படம்' என்று விளம்பரம் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் வீரமணி அவர்கள், திரைப்பட நடிகராக உள்ள பாக்கியராஜ் பல திரைப்படங்களை எடுத்ததுடன் இயக்கியும் உள்ளார். கோவை செழியன் கே.சி. பிலிம்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களை எடுத்தார். ஈரோடு இரா. ஜீவானந்தம் அவர்கள் 'கேபிஆர் பிலிம்ஸ்' என்ற பெயரில் 'கடற்கரைத் தாகம்" என்ற திரைப்படத்தை எடுத்தார்.