பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

ஈரோடு மாவட்ட வரலாறு


பிறையணி சடையன், பிறைகுடும் பெருமாள், எடுத்தகை அழகியாள், அம்பலத்தாடுவான். கூத்தாடும் தேவன், மன்றுள் ஆடுவான் போன்ற பெயர்களைச் சிலர் பெற்றிருந்தனர். பெண்டிரும் சடைமேலிருந்தாள், சூடிக்கொடுத்தாள், பாகம்பிரியாள் என்ற பெயர்களைப் பெற்றிருந்தனர், சிலர் எல்லார்க்கும் நல்லான், காண இனிய பெருமான், உலகை வலம் வந்தான் என்ற காரணப் பெயர்களைப் பெற்றிருந்தனர். அடியார்க்கு நல்லான், நச்சினார்க்கு இனியன் என்ற பெயர்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன.

வேறு சிலர் பல்லவராயர், காடவராயர், கச்சிராயர், சேதிராயர், அதிகைமான், வாணாதிராயர், தொண்டைமான் என்ற பழைய மரபுப் பெயரைச் சிறப்புடன் பெற்றிருந்தனர். அம்மரபிற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்பது ஐயமே. இதுவும் அரசர்கள் அனுமதியுடன் அல்லது அரசனால் அளிக்கப்பட்டு அவர்கள் தங்கள் பெயராக அவற்றை இணைத்து வைத்துக் கொண்டிருக்கலாம்.

கொடுமலூர் பெரியதேவர் மகன் "பெரியபிள்ளையான பெரிய தேவன்' என்று தந்தையின் பெயரையே சிலர் பெற்றுள்ளனர். சில பெண்கள் தந்தை பெயரையும் சில பெண்கள் கணவன் பெயரையும் தங்கள் பெயரோடு இணைத்து வைத்துக் கொண்டுள்ளனர். பெரிய நம்பி மகள் ‘நம்பியம்மை' என்றும், சூரிய தேவன் மனைவி 'தேவன் சொக்கி' என்றும் பெயர் பெற்றுள்ளனர். அரசனுடைய மனைவியர் தேவியார், பிராட்டியார் என்றும், அந்தணருடைய மனைவியர் பிராமணி, பாரியாள், அகமுடையாள் என்றும் பிறருடைய மனைவிமார் மனைக்கிழத்தி, மணவாட்டி என்றும் பெயர் பெற்றுள்ளனர்.

கோவி, காவி, தேவி, தாவி என்பன சுருக்கமான சில பெண்கள் பெயர்கள். பல பெண்கள் பெயர் அந்தியூராண்டி, அவினாசியாண்டி, பல்லவாண்டி, சோழாண்டி, செங்கூத்தாண்டி, பாண்டாண்டி என 'ஆண்டி' விகுதி பெறுவதன் காரணம் விளங்கவில்லை. "பாண்டிவேட்டுவன் புன்னத்தூரான் மகள் பாண்டாண்டி" என அழைக்கப்பட்டுள்ளாள்.

வரியில்லாத மக்கள்

குயவர், குறவர், சக்கிலியர் (தொட்டியச் சக்கிலியர், மதுரை சக்கிலியர், அனுப்பச் சக்கிலியர், கானக்காட்டுச் சக்கிலியர்) தொட்டியர்,