பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஈரோடு மாவட்ட வரலாறு


என்று சமணர்கள் மாற்றிவிட்டனர். அருகில் உள்ள பெருந்துறைக்கும் (வாகைப்) பறந்தலைக்கும் தொடர்பு உண்டா என்பது ஆய்வுக்குரியது.

ஆறுகள்

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய நான்கு ஆறுகளுமே சங்க இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன.

பவானியாற்றின் பழைய பெயர் வானி. பவானி பழைய ஆவணங்களில் ‘வானிகூடல்' என்றே குறிக்கப்படுகிறது. பதிற்றுப்பத்து 'சாந்துவருவானிநீர்' என்று கூறுகிறது. பவானியாறு ஓடிவரும் காட்டுப் பகுதியில்தான் சந்தனமரங்கள் மிகுதியாக உள்ளன. சந்தன மரங்களை அடித்துக் கொண்டு வருவதால் பவானி நீர் குளிர்ந்த தண்மையுடன் மணம் வீசுகிறதாம்.

நொய்யல் ஆற்றின் பழம்பெயர் காஞ்சி. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் 'நொய்மணல்' உள்ள காரணத்தால் தொய்யல் என்று பெயர் பெற்றது. ஈரோடு மாவட்டத்தில் நொய்யல்கரை மக்கள் தம் உற்றார் உறவினர்களோடு கோடைகாலத்தில் நொய்யலில் நீர் விளையாட்டு விளையாடி மகிழ்வாக விருந்துண்டு பொழுதைக் கழிப்பர் என்று கபிலர் பாடுகிறார்.

"மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவில்
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை
மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும் காஞ்சி"

என்பது அவர் பாடல் பகுதியாகும். அமராவதியாற்றை 'ஆன்பொருனை' என்று சங்க இலக்கியம் சிறப்பிக்கும்.

இந்த ஆறுகளில் குளிக்கும் பெண்களின் அணிகலன்கள் ஆற்றில் சுழன்று விழுந்தால் மேலே வந்து கரையிலிருந்து பார்த்தால் ஆற்று நீரின் அடியில் அணிகலன்கள் கிடப்பது தெரியுமாம். தண்ணீர் அவ்வளவு தெளிவாக முன்பு இருந்தது.