பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


வயதாகியும் உடல் உறுதியோடு-81 வயதில் 50 ஆண்டைய செறிந்த அனுபவங்களையும் கொண்ட இவ்விரட்டையரது வழிகாட்டுதல் நமக்குத் தேவை. வருங்காலத் தலைமுறையினரது நன்மை கருதி தங்களது செறிந்த அனுபவங்களை அவர்கள் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் சுயசரிதையை இவர்கள் இருவரும் எழுதிட வேண்டுகின்றேன். அப்படி எழுதப்பட்டால் அது இவ்விருவரது வாழ்க்கையைப் பற்றியதாக மட்டுமிராது. இவர்கள் வாழ்ந்த காலத்தைப் படம்பிடித்துக் காட்டிடும் உன்னதமானப் புகழ்மிக்க அத்தியாயமாக அது விளங்கும்.

"நான் எடுத்துக் கூறும். கொள்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதில் மற்றவர்களும் நம்பிக்கை வைக்கும் காலம் வரும்வரை நான் காத்திருக்கத் தயார். அந்தக் காலம் வரும்வரை விளைவுகளையும் ஏற்கத் தயார்" என்று கென்னடி கூறியதுபோல அதே உறுதியுடன் சர். ராமசாமி விளங்கி வருகிறார்.

ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றிய அவரது கருத்துக்களை இப்போது இந்தியைந் தாய் மொழியாகக் கொண்டவர்களும், ஏற்றுக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி இத்தனை அவசரக் கோலத்தில் திணிக்கப்படுவது கூடாதென்று அவர்கள் சொல்கிறார்கள்.

இவ்விரட்டையரது வாழ்வு மகத்தானது. மகோன்னதமானது. சூட்டினை ஏற்படுத்தாது. ஆனால் ஒளியினை உமிழும்.

இவர்களது சேவை இன்னும் நாட்டுக்குத் தேவை. சந்தைச் சதுக்கத்தில் வந்து நின்றுதான் மக்களை இவர்கள் வழிநடத்த வேண்டுமென்பதில்லை.

தாங்கள் இருக்குமிடத்துப் பலகணியில் நின்றபடியே இவர்களால் மக்களுக்கு வழி காட்டிட முடியும்.

இவர்கள் நிறை வாழ்வு வாழ்வார்களாக.