பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 87



இந்த முடிவுக்குத் தொழிலாளர்கள் வந்து சேர ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் பிடித்தது.

ஆகவே, குறைகளை உணர்ந்து, அவைகளுக்குக் காரணம் யாவை என்பது பற்றிய விவாதத்தில் ஈடுபட்டு, உண்மைக் காரணத்தைக் கண்டு பிடித்து, பிறகு அவைகளைப் போக்கிக் கொள்ள, தனித்தனியே முயற்சித்துப் பார்த்து, முடியாது போன பிறகு தொழிலாளர்கள் ஒரு ஸ்தாபன ரீதியாகத் தமது குறைகளை எடுத்துக் கூறித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற, முடிவுக்கு வந்தனர். தங்களின் வாழ்க்கை முறையும். தொழில் முறையும், தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைவுகளும், எல்லாத் தொழிலாளருக்கும் ஒரே விதமாக இருக்கக் கண்டு, அவைகளுக்கும் உள்ளது ஒரே வகையான வியாதி என்று தெரிவதால், அனைவரும் ஒரே வகை மருந்து தேடவேண்டும் என்று முடிவு செய்து, ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத்தன்மை கெடாதிருக்க ஸ்தாபனம் அவசியமானது என்பது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும். எனவே ஸ்தாபன ஐக்கியம் இந்தப் பொது உணர்ச்சி கெடாதபடி பாதுகாத்துக் கொண்டால் தான் முடியும். கந்தன் முருகனுக்கும் சேர்த்துத்தான் நியாயம் கோருகிறான். முத்தன் மூவருக்கும் சேர்த்தே நீதி கேட்கிறான். ஒவ்வொருவரும் மற்ற யாவருக்கும் சேர்த்தே நியாயம் கேட்கிறார்கள். ஸ்தாபனத்தின் முக்கிய இலட்சணம் இதைப் பொறுத்தே இருக்கிறது. ஸ்தாபனத்தின் மூலம் அதைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நலன் கிடைக்கிறது என்பது விளக்கமானால்தான், ஸ்தாபனத்திலே ஐக்கிய உணர்ச்சி இருக்கமுடியும். கந்தனுக்குத் தெரியாமல் முருகனும், முருகன் அறியா வண்ணம் முத்தனும், தனித்தனியே நடவடிக்கையை எடுத்தால், ஸ்தாபனம் உடைந்து விடும். பொதுத்தன்மை தான் ஸ்தாபனத்துக்கு அரண்.

இந்தப் பொதுத்தன்மை பலமாக இருக்க வேண்டுமானால், ஸ்தாபனம் மிக மிக நியாயமான கொள்கைகளின் மீது கட்டப்பட வேண்டும்.