பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

125


கட்டிவிடப்பட்ட கற்பனைகளைக் காட்டி ஏமாற்றி, தங்களை மேல் ஜாதி யென்று காட்டிக்கொண்டு பாடு படாமல் வாழும் சுரண்டல்காரர்களின் கொட்டம் இராது என்றே பொருள்.

திராவிட நாட்டிலே உற்பத்தி சாதனங்கள், பெரிய தொழிற்சாலைகள், போக்குவரத்துத் தொழில், லேவாதேவி முதலிய பெரும் லாபந்தரும் தொழில்கள் தனிப்பட்ட முதலாளிகளிடம் இராது. சர்க்காரே நடத்தும். ஆகவே முதலாளித்வம் இராது.

தேன் குடத்திலே தேள் !

வெள்ளைக்கார முதலாளியிட மட்டுமே தகராறு நடத்தலாம். நமது சர்க்கார் நடக்கும்போது கூலிக்காகவோ, உரிமைக்காகவோ வேலை நிறுத்தம் போன்ற தகராறுகளில் இரங்கக்கூடாது என்று யோசனை கூறுவது அசல் பெர்லின் வாதம் ! விழிப்புற்ற தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரிடையாக நிற்பது இடுப்பொடிந்த ஏகாதிபத்யமல்ல. முறுக்கேறிய மூலபலம் உள்ள படைபலம் மிகுந்த தேசியம் அன்புடன் சொந்தம் கொண்டாடி, பாட்டாளிகளே வளர்த்த தேசியம். தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் இது எதிர்பாராத விபத்து ! எங்கு ஆதரவு கிடைக்குமென்று அவர்கள் மனமார நம்பினார்களோ அதே இடத்திலிருந்து எதிர்ப்பு ! தேடியெடுத்த தேன்குடத்திலிருந்து தேள் கிளம்பி, கொட்டுகிறது ! தேசியம் நாசிசமாக மாறுகிறது

சிறைக்குள் தள்ளி கிளர்ச்சியை அடக்கிய எந்த வல்லரசும் வரலாற்றில் இடம் பெற்றதில்லை. பாஸிசத்தின் முதல் அடி பயங்கரமானதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் வீழ்ச்சி எதிர்பாராத நேரத்தில் இருக்கும். திடீரென்று சரியும்.