பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. சிந்தனைச் செல்வம்


“தம்பி! எதையும் சிந்தித்துப் பார்! சிந்தனையும் ஒரு செல்வமாகும். ஆகவே, அச் செல்வத்தை நீயும் பயன் படுத்து.”

“அண்ணா! எதைப்பற்றி நான் சிந்திப்பது? சிந்திக்க என்று பொருள் வேண்டாமா?”

“தம்பி! நீ சிந்திக்க முதலில் தொடங்கு. பிறகு பல பொருள்கள், ‘என்னைப் பற்றிச் சிந்தனை செய்!’ ‘என்னைப் பற்றிச் சிந்தனை செய்!’ என, ஒவ்வொன்றும் முந்திக்கொண்டு வரும்.”

“அண்ணா! முதலில் சொல்லுங்கள்; இப்போது நான் எதைப்பற்றிச் சிந்திக்க?”

“தம்பி! மக்களின் கண்களைப் பற்றிச் சிந்தனை செய்! முதற் கேள்வியை நானே கேட்கிறேன்; கண்கள் எதற்காக இருக்கின்றன?”

“அண்ணா! பார்ப்பதற்காக இருக்கின்றன.”

“தம்பி! விலங்கு, பறவை முதலியவைகளின் கண்களும் பார்ப்பதற்காகத்தான் இருக்கின்றன. நான் சிந்திக்கச் சொல்லியது மக்களின் கண்களையல்லவா?”

“அண்ணா! கண்கள் இல்லாதவர்களின் முகம் அழகாகத் தோன்றவில்லை. கண்கள் அழகுக்காக இருக்கின் றனவோ?”

“தம்பி! எல்லா உறுப்புக்களும் அழகுக்காகத்தான் இருக்கின்றன. மேலே சிந்தனை செய்!”

“அண்ணா! படிப்பதற்காக, ஓவியக் காட்சிகளை , இயற்கை அழகுகளைக் கண்டு மகிழ்வதற்காக இருக்கின்றன.”