பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

மாட்டிய அந்த வெள்ளைக்காரர்களைக் கண்டு அவர்கள் வியப்பும் அச்சமும் கொண்டார்கள். எங்கோ வானிலிருந்து குதித்த தேவர்களோ என்று எண்ணினார்கள். ஆடையே யணியாத அந்தத் தீவு மக்களைக்கண்டு கப்பல் தலைவர்கள் பெரும் வியப்புக் கொண்டார்கள்.

கரையில் இறங்கியவுடன் கொலம்பஸ் தான் ஏதோ ஓர் இந்திய நாட்டுப் பகுதியில் இறங்கியிருப்பதாகவே எண்ணினான். ஆகவே, முதன் முதலில் அம்மணமாகத் தான் கண்ட அந்த மக்களுக்கு அவன் இந்தியர்கள் என்றே பெயர் சூட்டினான். அந்தப் பெயரே இன்றுவரை அம்மக்கள் கூட்டத்தின் பெயராக நிலைத்துவிட்டது. இன்று அவர்களை நம்மினின்று வேறுபடுத்துவதற்காகச் சிவப்பு இந்தியர் என்று அழைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழ்ப்புறத்தில் உள்ள பகாமாத்தீவுகளில் ஒரு சிறுதீவு அது. குவானகானி என்று பெயருள்ள அந்தத் தீவின் மக்களைக் கண்டவுடனே, அவர்களின் வெள்ளையுள்ளத்தை அறிந்த உடனேயே, தங்களுக்காக அவர்களை உழைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கொலம்பஸ் முடிவு கட்டிவிட்டான். ஆடையின்றி நிற்கும் அந்த மக்களில் சிலருடைய மூக்குகளில் தொங்கிய தங்க வளையங்கள், கப்பல்காரர்களின் கருத்தைப் பெரிதும் கவர்ந்தன.

கொலம்பஸ் அந்தத் தீவை இரண்டு நாட்கள் முழுவதும் ஆராய்ந்தான். அது ஜப்பான் தீவுகளில் ஒன்றாயிருக்குமா. சீனாவைச் சேர்ந்ததாக இருக்குமா என்று கண்டு பிடிக்க முயன்றான். அந்தத் தீவுமக்களுடன் சைகை மொழியில் பேசியதிலிருந்து தெற்கிலும் மேற்கிலும் அதுபோல் பல தீவுகள் இருப்பதாக அறிந்து கொண்டான். தன் கையில் இருந்த நிலப்படத்தில் ஜப்பானுக்குத் தெற்கே இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும் தீவுக்கூட்டம் தான் இது என்று எண்ணினான் அவன்.