பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

காட்டுவதும், முதுகிட்டார் மேல் படை விடுவதும் வீரனுக்கு ஏற்ற செயல்கள் அல்ல. அசுரர்களின் ஆரவாரச் செயல்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களைத் தவிடு பொடியாக்கிய முருகன் அவர்களை முதுகில் அடிக்கவில்லை. வேலால் அவர்கள் மார்பைத் துளைத்தான். அதனால் அவர்களுடைய மார்பிலிருந்து குருதி வெள்ளம் பிரிட்டுப் பாய்ந்து குளமாகத் தேங்கியது. அதனால்தான்,

அவுணர் உரத்து உதிரக்குளத்து

என்றார் அருணகிரியார். உரம் என்பது மார்பு. மார்பிலே படுகின்ற புண்ணை விழுப்புண் என்பார்கள். அவுணர் உரத்து உதிரம் என்றது முருகனுடைய சிறந்த வீரத்தைக் காட்டி நிற்கிறது.

இராவணனை அம்பு எய்து கொன்றான் இராமன். இறந்து கிடந்த இராவணனை இராமன் போய்ப் பார்த்தான். குரங்குகள் அவன்மேல் ஏறித் துகைத்தன. அப்போது அவன் முதுகில் ஏதோ புண் இருப்பதைக் கண்டான் இராமன். "அடடா! நான் இராவணனை முதுகில் அடித்துக் கொன்றுவிட்டேன்போல் இருக்கிறதே! என்ன காரியம் செய்தேன்!" என்று ஒரு கணம் திடுக்கிட்டான். அதை விபீஷணன் கண்டு அவனைத் தெளிவித்தான். "நீங்கள் வருத்தம் அடையக் காரணமே இல்லை. இவன் திக்கயங்களோடு பொருதபோது அவற்றின் கொம்புகள் மார்பிலே பாய்ந்தன. அவை உருவி முதுகிலே வந்த சுவடு அது. ஆகையால் உங்கள் அம்பினால் உண்டான புண் என்று எண்ணாதீர்கள்" என்று அவன் எடுத்துச் சொன்ன பிறகே இராமன் தெளிவு பெற்றான்.

முருகனும் முதுகில் அடிக்கிறவன் அல்ல. தேவசேனாபதியாகிய அவன் வீரருள் வீரன். அவன் அவுணர்களின் மார்பிலே வேலைப் பாய்ச்சி வெற்றி பெற்றான்.

"பேய்கள் பிணத்தைத் தின்று குருதிக் கடலிலே குதித்து விளையாடும்படியாக அசுரர்களைச் சங்காரம் செய்தவன் அல்லவா நீ? என் துன்பங்களுக்கெல்லாம் காரணமான பிரமத்தைப் போக்கியருள மாட்டாயா?" என்று இந்தப் பாட்டில் அருணகிரிநாதர் வேண்டிக் கொள்கிறார்.

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்என்றன்

க.சொ.1-16

233