பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282


இராவணனோ அவனை ‘வீரம் இழந்த கோழை’ என்று குறைக் கூறினான். தானே போருக்குச் செல்வதாகக் கூறியபோது, கும்பகன்னன் தானே செல்வதாகக் கூறி அண்ணனிடம் விடைபெற்றுக்கொண்டான்.

“வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன் விதி
நின்றது பிடர் பிடித்து உந்து நின்றது.”

“நான் மீண்டும் உயிருடன் திரும்புவேன் என்று நினைக்கவில்லை! விதி என்னைப் பிடர் பிடித்துத் தள்ளுகிறது. நான் அனேகமாய் இறந்துவிடுவேன். நான் இறந்துவிட்டால் சானகியைவிட்டு விடலே உனக்கு நன்மை பயக்கும். ஒரு வேளை சீதையை விடாமல் இந்திரசித்தை போருக்கு அனுப்புவாயாகில், இலட்சுமணனின் அம்பு அவன் உயிரைக் குடிக்கும். நீயும் வெற்றி அடையமாட்டாய்! எனவே சீதையை விட்டுவிடு!” என்று மீண்டும் மீண்டும் கூறினான் கும்பகன்னன்,

“இது நாள்வரை நான் ஏதேனும் குற்றம் செய்திருப்பின், அவற்றையெல்லாம் பொருத்தருள்வாய், கொற்றவா! இனி உன் முகத்தில் நான் விழிப்பது அரிது. விடைபெற்றுக் கொண்டேன்” என அவன் விடைபெறும் காட்சி, கல்மனத்தையும் கரைக்காதோ?

போர்க்களத்தில் இராமனிடம் விபீடணன் கும்பகன்னனின் வீர ஆற்றல்களைப்பற்றி விரிவாகக் கூறுகிறான். சுக்ரீவன் கும்பகன்னனை தம்முடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னதைக் கேட்டு, விபீடணன் கும்பகன்னனை அழைத்துவர தன் அண்ணனிடம் செல்கிறான். இராகவனிடம் தஞ்சமடைந்து வாழவேண்டும் என்று விபீடணன் கும்பகன்னனை பணிவுடன் கேட்டுக்கொள்கிறான். ஆனால் கும்பகன்னனோ, “நான் தூங்கியெழுந்திருக்கும்போதெலாம் எனக்கு வேண்டிய மது மாமிசம் ஆகியவற்றை சித்தமாக வைத்துக்கொண்டு ஊட்டி வளர்த்தவன் இராவணன்.