பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

களின் உரைநடைகள் இத்தகைய சிறப்பு முத்திரை பெற்றனவாகும். இனி, திரு.வி.க. அவர்களின் உரைநடையைச் சிறப்பாக நோக்குவோம்:

அண்மைக் காலத்தில் அறிஞர் அண்ணாதுரையின் சொற்பொழிவைக் கேட்கப் பெருங் கூட்டம் கூடுவதைப் பார்த்திருக்கிறோம். அறிஞர் அண்ணாதுரை தலையெடுப்பதற்கு முன், திரு.வி.க.வின் பேச்சைக் கேட்கப் பெருங் கூட்டம் கூடுவதுண்டு. திரு.வி.க. வின் பேச்சு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதுபோலவே அவரது எழுத்தும் தனிப் பெருமை உடையது. அழகான எழுத்துநடை என்பது, ஒழுங்கான பேச்சுநடையின் விளைவே என்று ‘கிரீனிங்'(Greening) என்ற அறிஞர் கூறியுள்ளார். இதைத் தான் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். எனவே, சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த திரு.வி.க. அவர்கள், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியதில் வியப்பில்லை. திரு.வி.க. வின் உரைநடைக்கு அழகு அளிப்பனவாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்

புதிய கருத்துகள்-புரட்சிக் கருத்துகள்-பழமையிலும் புதுமை காணும் கருத்துகள்-வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகள்-உடனடியாக நேர்ப்பயன் அளிக்கும் கருத்துகள்ஆகியவை அடங்கியிருப்பது, அவரது உரைநடைக்கு ஒரு வகையில் அழகு தருகின்றது. மற்றும், முற்றுப்புள்ளியிட்ட சிறுசிறு வாக்கியங்களும் அரைப் புள்ளியிட்ட தொடர்வாக்கியங்களும் அமந்திருப்பது-ஒருசொல்லையே திரும்பத் திரும்ப இருமுறை மும்முறை கூறும் அழுத்தம் உடைமை-பலர்க்குக் கைவராத சிறந்த மிகவும் இனிய சொற்களும் சொற்றொடர்களும் வலிந்து தேடாமல் இயற்கையாக முன்வந்தமைவது-ஆகியனவும் இன்ன பிறவும்.