பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

காந்தியடிகள் பற்றிச் சில சொற்கள்: “... ... இந்த சனநாயக உணர்வைக் கிளப்பியவர் யாவர்? மகாத்மாகாந்தி என்று மண்ணும் சொல்லும்; மரமும் சொல்லும்.”

விடுதலை உரிமை பற்றிச் சில தொடர்கள்: “பிறப் புரிமை இன்பத்திற்கு மனைவி இன்பம் ஈடாகுமோ? மக்களின்பம் ஈடாகுமோ? அரச இன்பம் ஈடாகுமோ? உலகிலுள்ள எவ்வின்பம்தான் அதற்கு ஈடாகும்?”

இளைஞர்க்கு ஒர் அறிவுரை:

"... ... கிளர் ஈரலும் தடைபடாக் குருதியோட்டமும் எஃகு நரம்பும் ஏக்கழுத்தும் பீடு நடையும் உடையவர் களாக நீங்கள் திகழ்தல் வேண்டும்."

செல்வர்கட்குக் கூறியிருப்பதாவது:- “தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு திருவள்ளுவர் பிறந்த நாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்கும் கருவி. அதை ஒதுங்கள். அதன்படி ஒழுகுங்கள் ... ... "

திருக்குறள் பற்றிய கருத்தோடு திரு.வி.க. வின் உரைநடையை நிறுத்துவோம். மேலே திரு.வி.க. வின் உரைநடைப் பகுதிகள் பல தரப்பெற்றுள்ளன. உரை நடை அழகு சொற்களால் விளக்கக் கூடியது அன்று; ஒவ்வொருவரும் படித்தும் கேட்டும் உணர்ந்து சுவைக்க வேண்டிய ஒன்றாகும் அது.

இங்கே, திரு.வி.க.வின் உரைநடை அழகோடு பல தரப்பட்ட சிறந்த செய்திகளையும் தெரிந்து கொண்டோம் அல்லவா?