பக்கம்:களத்துமேடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

களத்து மேடு

பனியின் கூதல் ஆரம்பித்துவிட்டது.

கொட்டடியில் சிதறிக் கிடந்த சாணத்தைச் சுமந்து எருக்குழியில் வீசி கை கழுவினாள். கூடத்தில் படுத்துக் கொண்டாள்.

காக்கைகள் கம்பலை எழுப்பிக் கொண்டிருந்தன !

ஊர்ப் பொது விளக்கு அழுது வடிந்தது !


விடிந்தது பொழுது.

விளைந்தன விந்தைகள்.

மண்ணைப் பொன்னாக்க ஏர்க்கலப்பைகளும் உழவு மாடுகளும் புறப்படத்தொடங்கிவிட்டன. பின் சாமத்தில் உழவு மழைபொழியத் தொடங்கிய பின், உழைப்பின் சக்தி உற்சாகம் பெறக் கேட்கவா வேண்டும்? உழுது, நீர்பாய்ச்சி, நாற்று நட்டு, கதிர்மணிகள் சிரிக்கின்ற பொன்னான காட்சிகளை இப்போதே மனக்கண்ணிலே தரிசிக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள் !

செங்காளியப்பன் சேர்வை தீவிரமான சிந்தனையுடன் வேப்பங் குச்சியும் கையுமாக வாசலில் வந்து நின்றார். வடக்கே அறுவடை முடிந்து வீணே கிடந்த ஆதிபிரமர்சாமி நஞ்சைத் தாக்கு, குப்பந் தேவன்தாக்கு, வல்லவாரி எல்லைத்தாக்குகளை ‘தொழி’ உழுது போடுவதற்கான ஆயத்தங்களைப்பற்றியும், மேற்கே நிலக்கடலை பிடுங்கிக் கிடந்த துண்டுகளை உழுது இடைப்பட்டமாக, எள், உளுந்து பாவுவதற்குரிய ஆக்க வழிகளைப்பற்றியும் ஆலோசித்தார் அவர். தோளில் கிடந்த துண்டை எடுத்துக் தலையில் முண்டாசு சுற்றிக்கொண்டு வாய் கொப்பளிக்க முனைந்தார். பிறகு உள்ளே விரைந்து சுவாமி கும்பிடலானார் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/25&oldid=1385882" இலிருந்து மீள்விக்கப்பட்டது